பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 415

"நான் சொல்லியதைத்தான் இவள் கேட்கவில்லை. நெருங்கிப் பழகுகிற நீங்களாவது காலாகாலத்தில் கல்யாணத்தைப் பற்றி இந்தப் பெண்ணுக்கு நினைவுபடுத்த வேண்டாமோ அம்மா! இவளுக்கு வயதென்ன, கொஞ்சமாகவா ஆகிறது? மனத்துக்குள் என்னதான் நினைத்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாளோ? இவள் பேசாமல் இருந்தாலும் விவரம் தெரிந்த நீங்களெல்லாம் பேசாமல் இருக்கலாமா அம்மா?"

'எல்லாம் தானே நடக்கும் பாட்டி அது அதற்குக் காலம் வரவேண்டாமோ?' என்று பொதுவாகப் பதில்கூறி பாட்டியின் கேள்வியைச் சமாளித்தாள் மங்களேசுவரி அம்மாள். அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு பூரணியின் பழைய தோழி கமலாவின் வீட்டுக்குப்போய்ச் சிறிதுநேரம் இருந்தார்கள். கமலாவுக்குப் பெண் குழந்தை பிறந்து இரண்டு மூன்று நாட்களாயிருந்தன. கமலாவின் தாய் வெள்ளித்தட்டு நிறையச் சர்க்கரையும், தாம்பூலமும், பூவும் வைத்துப் பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தோடு அவர்களுக்கு உபசாரம் செய்தாள்.

பிள்ளைப்பேறு நிகழ்ந்த அறைக்குள் தாய்மைக் கோலத்தின் பெருமிதப் பொலிவோடு படுத்திருந்த கமலாவையும், அருகில் சண்பகப் பூங்குவியல் போல் மஞ்சள் பொன் நிறத்துக்குத் தவழ்ந்த குழந்தையையும் பார்த்தாள் பூரணி. அந்த அறைக்குள் உலகத்திலேயே இணையற்றதும் பெரியதுமான புனித அழகு ஒன்றைக் கண்டுகொண்டிருக்கிற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. கலைந்த கூந்தலும், கரு வளையமிட்ட கண்களும், தாயாகிப் பெற்ற எழிலும் குலவ உயிருள்ள தெய்வச் சிலை தளர்ந்து துவண்டு கிடப்பது போல் படுத்திருந்தாள் கமலா.

'வா பூரணி! அப்படியே உட்கார்ந்துகொள். இலங்கைக் கெல்லாம் போய்ச் சுற்றிவிட்டு வந்தாயாமே? பிரயாணம் சுகமாக இருந்ததா?' என்று கமலா அன்புடன் விசாரித்தாள். அவளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள் பூரணி.

'போய்விட்டு வருகிறேன், கமலா. அடுத்த வாரம் கல்கத்தாவுக்குப் போகிறேன். திரும்பி வந்ததும் மறுபடியும் உன்னைப் பார்க்க வருகிறேன். உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள் என்று கூறி விடைபெற்றுக்கொண்டு பூரணி எழுந்திருந்த போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/417&oldid=556140" இலிருந்து மீள்விக்கப்பட்டது