பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 425

நேராமல் தன் துயரத்தைத் தன்னோடு மறைத்துக் கொண்டு விட்டதில் அவனுக்கும் மகிழ்ச்சியே. திருமதி மீனாட்சிசுந்தரத்தின் காலடியில் அச்சகத்தின் சாவிக் கொத்தை வைத்து வணங்கி விட்டு வானமே நிழலாய்ப் பூமியே நிலையாய் ஒரு பற்றுக்கோடும் இன்றி அவன் கிளம்பிய பின்புதான் பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளுடனும் சென்னைக்கு இரயிலேறினான். எவ்வளவோ தன்னடக்கத்தோடு தன் வேதனையை மறைத்துகொண்டு அவன் கலகலப்பாகத்தான் இருக்க முயன்றான். ஆயினும் 'இன்று உங்கள் முகம் ஏதோ களை குன்றிக் காணப்படுகிறது. உங்களுக்கு உடல் நலமில்லை போல் தோன்றுகிறது. இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் எங்களை வழியனுப்பச் சென்னை வரை வருவானேன்? நாங்கள் பார்த்துப் போய்க் கொள்ள மாட்டோமா?' என்று இரயிலில் போகும் போது பூரணி அவனைக் கேட்டு விட்டாள். மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதிலும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல இராமன் இருந்ததாகப் பள்ளிப் பருவத்தில் கம்பராமாயணம் படித்திருந்தானே. அப்படி இருந்து விட வேண்டுமென்று தான் முயன்றான் அரவிந்தன் . ஆனால் நுணுக்கமான நோக்குள்ள பூரணி அவன் முகத்தையும் சிரிப்பையும் கடந்து உண்மையைக் கண்டு விட்டாள். அவளைக் கலகத்தா மெயிலில் ஏற்றியனுப்பு கிற வரையில் ஏதேதோ சொல்லி உண்மையை மறைத்து விட்டு வந்திருந்தான் அவன்.

சென்னையிலிருந்து திரும்பிய அன்று காலையில் தன் பெட்டி படுக்கை முதலிய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவதற்காகக் கடைசியாய் அச்சகத்துக்குச் சென்றான். பெட்டி படுக்கைகளையும், வேட்டி துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பினபோது அவற்றில் சிலவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு பூரணியின் தம்பி திருநாவுக்கரசும் உடன் வெளியேறி விட்டான். விசாரித்ததில் 'எனக்கு நேற்றோடு கணக்குத் தீர்த்து வெளியே போகச் சொல்லி விட்டார்கள். இனிமேல் இங்கென்ன வேலை' என்றான் திருநாவுக்கரசு. அச்சகத்திலிருந்து ஒழித்துக் கொண்டு வெளியேறும் போது, கூடியவரை எவருடைய கண்களிலும் படாமல் வெளியேற வேண்டும் என்றுதான் அரவிந்தன் எண்ணியிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/427&oldid=556150" இலிருந்து மீள்விக்கப்பட்டது