பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 41

மடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசி யெறிந்துட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்' என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி, தன் குற்றமின்மையை அக்காவுக்குப் புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்ததிலும் "பாலு ' என்கிற முரட்டுப் பையனைப் பற்றிக் கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்திலும் கூடத் தவறு தன்னுடையதில்லை’ என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.

திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்று கொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.

ஒன்றும் பயமில்லை விரைவில் சரியாகிவிடும் என்று சொல்லி விட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்று போட்டு முடிந்தார் வைத்தியர். 'கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல் ஆகிவிடும்' என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லி விட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க் கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப் போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்,

வைத்தியர் சிரித்தார். 'உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்து விடாது அம்மா. அழகிய சிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக் கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கி கொள்கிறேன்' என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்து விட்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/43&oldid=555767" இலிருந்து மீள்விக்கப்பட்டது