பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 437

காரியமில்லை' என்று சிறிது கண்டிப்புக் கலந்த குரலில் கூறினான் முருகானந்தம். அரவிந்தன் இதற்கு மறுமொழி கூறவில்லை.

பர்மாக்காரர் தொலைபேசி மூலம் இரண்டு முறை தன்னை அழைத்து மிரட்டியதையும் முருகானந்தத்திடம் சொல்லி விடலாமா என்று நினைத்தான் அரவிந்தன். அதை அவனிடம் தெரிவிப்பதனால் அவனுக்கு ஆத்திரம் உண்டாகி ஏதாவது வீண்வம்பு இழுத்துக் கொண்டு வருவான் என்று தோன்றியதனால் சொல்லாமல் இருப்பதே நல்லதென்று அடக்கிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் முருகானந்தம் வெளியே சென்றதும் பாதி படிக்காமலே பைக்குள் வைத்திருந்த பூரணியின் கடிதத்தை எடுத்து மீண்டும் தொடர்ந்து படிக்கத்தொடங்கினான். வெப்பம் மிகுந்த சூழலில் குளிர்ந்து சுனை நீரில் மூழ்கினாற்போல் முருகானந்தத்தின் எச்சரிக்கையும், பர்மாக்காரரின் மிரட்டலும் குழப்பியிருந்த மனத்தைப் பூரணியின் கடிதம் மறுபடியும் இங்கிதக் கனவுகளிலே மூழ்கச் செய்தது. தான் கண்டு மகிழ்ந்த கல்கத்தா நகரத்தையும், தன் உள்ளத்து உணர்வுகளையும் ஒவியமாக்கி வரைந்தனுப்பினாற் போல அந்தக் கடிதத்தையும் எழுதியிருந்தாள் அவள். அந்தக் கடிதத்தில் சண்பகம் மட்டும் மணக்கவில்லை. கருத்தும் மணந்தது, கருத்தோடு கலந்த உணர்வும் மணந்தது.

'பாரதத்தின் தலை சிறந்த கவிஞரையும் நாவலாசிரியரையும் ஆத்ம ஞானியையும் வீரரையும் அளித்த வங்கநாட்டு மண்ணில் அமர்ந்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்குச் சொல்லரிய பெருமிதம் உண்டாகிறது அரவிந்தன். தாகூரின் கவிதைகளிலுள்ள ஆழ்ந்த சோகமயமான அழகைக் காணும்போது, சரத்சந்திரரின் நாவல்களில் காணும் உயிருணர்வு ததும்பும் பாத்திரங்களையும், கிராமச் சூழ்நிலை களையும் படிக்கும்போது, மானசீகமாக வங்க நாட்டுக்கு வந்த துண்டு. பலமுறை இராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரின் உள்ளொளி வெள்ளத்தில் திளைத்தபோதும், சுபாஷ்சந்திரரின் வீரவாழ்வை எண்ணி எண்ணி வியந்தபோதும் வங்க நாட்டுப் பொங்குபுகழ்ச் சிறப்புக்காக மெய்சிலிர்த்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் உள்ளத்தால் நூல்களின் உலகத்தில் சுற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/439&oldid=556162" இலிருந்து மீள்விக்கப்பட்டது