பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 குறிஞ்சிமலர்

அரவிந்தனாகத் திரும்பி வரவில்லை. உலகத்துத் துன்பங்களைப் போக்கும் முயற்சியில் அந்தத் துன்பங்களை எல்லாம் தன் நெஞ்சில் நினைவுகளாகச் சுமந்து கொண்ட புத்தனைப் போல் எந்த விஷக்காய்ச்சலிலிருந்து கிராமத்து மக்களை விடுவிப்பதற் காகத் தொண்டுசெய்ய அவன் சென்றிருந்தானோ அதே காய்ச்சலை உடல் நிறைய ஏற்றுக்கொண்டு வந்திருந்தான். எலும்பும் தோலுமாய் இளைத்துக் கறுத்துப் போயிருந்தது அரவிந்தனின் அழகு மேனி. சிரித்துக் கொண்டே இருப்பதுபோல் ஒரு கவர்ச்சிகரமான சாயல் அமைந்த அவனுடைய கண்கள் சோர்ந்து பள்ளமானவை போல் ஆகியிருந்தன. கார் டிரைவரும் முருகானந்தமும் கைத்தாங்கலாக அவனை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்கள். தளர்ந்து தள்ளாடி நடந்தான் அரவிந்தன்.

'அக்கா உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் கிராமத்துக்குப் போனது நல்லதாயிற்று. வேளைக்குச் சோறு தண்ணிரின்றிக் கிராமத்து வெய்யிலில் இவன் பாட்டுக்கு அலைந்து திரிந்திருக்கிறான். தொண்டு தொண்டு என்று சுற்றிக் கடைசியில் தன் உடம்புக்கே காய்ச்சலை இழுத்துவிட்டுக் கொண்டு விட்டான். நமக்காவது ஒரு வரி, கடிதம் எழுதிப்போடக்கூடாதோ? அதையும் செய்யாமல் எவனோ ஒரு குடியானவனுடைய குடிசையில் விழுந்து கிடக்கிறான். அந்தக் கிராமத்தில் டாக்டர்கூட இல்லை. பத்து மைலுக்கு அப்பால் பக்கத்துக் கிராமத்திலிருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஒரு எல்.எம்.பி. வைத்தியர் வந்து போகிறார். அவன் அவரிடமும் சரியாக மருந்து சாப்பிடவில்லையாம். அவர் இவனைத் தேடிக்கொண்டு வந்தபோதெல்லாம், 'எனக்கு ஒன்றுமில்லை; நான் பிழைத்துக் கொள்வேன். கிராமத்து மக்களை இந்தப் பாழும் தொற்று நோயிலிருந்து காப்பாற்றுங்கள் போதும் என்று கூறி அவரை அனுப்பி விட்டானாம். நூற்று மூன்று டிகிரிக் காய்ச்சலோடு அந்தக் குடிசையின் ஈரம் கசியும் மண்தரையில் முள்ளாய்க் குத்தும் வைக்கோல் மெத்தையின் மேல் அநாதை போல் விழுந்து கிடந்த இவனைக் கண்டபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது அக்கா. மறுபேச்சுப் பேசாமல் காரில் தூக்கிப் போட்டு இங்கே கொண்டு வந்தேன்' என்று துயர் கனிந்து தளர்ந்த குரலில் பூரணியிடம் கூறினான் முருகானந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/454&oldid=556177" இலிருந்து மீள்விக்கப்பட்டது