பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 461

பாராட்டி அக்காவுக்கு மாலை அணிவிக்க வந்திருக்கிறார்கள். நான் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன். அக்காவைத் தயாராக இருக்கச் சொல். இன்றிரவு எல்லோருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிடு. அரவிந்தனுக்குகூடக் காலையில் நாம் வரும்போது காய்ச்சல் குறைந்து தெம்பாக இருந்தது. மாடியறையிலிருந்து நடத்திவந்து கூடத்தில் அரவிந்தனை உட்காரச் சொல்... பின்னாலேயே நாங்களும் வந்து விடுகிறோம்: என்று கூறி வசந்தாவையும் சிறுவர்களையும் முன்னால் வீட்டுக்கு அனுப்பினான் முருகானந்தம். வந்தவர்கள் யாவரும் ஆர்வத்தோடு முருகானந்தத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வார்டிலிருந்தும் மாலைகளோடு மனிதர்கள் வந்திருந்தார்கள். ஒரு பெரியவர் "ஆச்சரியப்பட வேண்டிய வெற்றியப்பா இது. வெளிப்பகட்டு இல்லாமல், விளம்பரம் இல்லாமல் மனிதர்களின் நம்பிக்கையில் பெற்ற வெற்றி சத்தியத்துக்குக் கிடைத்த வெற்றி, இதை நன்றாகக் கொண்டாட வேண்டும். பால் போல் நிலாக் காய்கிறது. இரட்டை குதிரைச் சாரட்டில் புஷ்பாலங்காரம் செய்து நான்கு மாசி வீதிகளிலும் அந்தப் பெண்ணை ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டும். பாண்டு வாத்தியம், இரட்டை மேளம், வாண வேடிக்கை எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்' என்று தணியாத ஆசையோடு முருகானந்தத்துக்கு அருகில் வந்து கூறினார். யாருடைய அன்பையும் புறக்கணிக்க முடியாத நிலையில் இருந்தான் முருகானந்தம். பூரணிக்கோ அரவிந்தனுக்கோ இந்த ஏற்பாடுகள் பிடிக்காதவையாக இருக்குமென்று அவன் உணர்ந்திருந்தாலும் மக்களின் அன்பு வெள்ளம் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. பூரணியின் வெற்றியே அதற்காக உழைத்துப் பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சொந்த வெற்றியாகத் தோன்றியது. அதனால் அடக்க முடியாத கோலாகலப் பெருக்கில் என்னென்னவோ ஏற்பாடுகள் செய்தார்கள் அவர்கள். அவர்களை எந்த உற்சாகத்திலிருந்தும் விலக்காமல் தானும் அவர்களோடு ஒருவனாகக் கலந்து கொண்டு விடுவதைத் தவிர முருகானந்தத் தால் வேறெதுவும் அப்போது செய்யமுடியவில்லை. நகர மண்டபத்துக்கருகில் அம்மன் சந்நிதியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுத் தானப்ப முதலித் தெருவுக்குப் போய் அங்கே பூரணியை அழைத்துக் கொண்டு நான்கு மாசி வீதிகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/463&oldid=556186" இலிருந்து மீள்விக்கப்பட்டது