பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 குறிஞ்சிமலர்

சொற்களை இப்போது அவள் எண்ணினாள், உள்ளம் துடித்தது. அப்படியே தன்னுடைய மூச்சும் நின்று போய்விடக்கூடாதோ என்று தவித்தாள் அவள். 'சிலப்பதிகாரத்தில் பாண்டியன் இறந்த வுடன் அவன் தேவி தன்னுயிரைக் கொண்டு அவனுயிரைத் தேடுவாள் போல் இறந்தாளென்று இளங்கோ பாடியிருக்கிறாரே! அதே போல் என்னுயிரைக் கொண்டு நான் அரவிந்தன் உயிரினைத் தேட முடியுமா?' என்று நினைந்து நினைந்து அழுதாள்.

வீட்டுக்கு வெளியே மாலைகளோடு காத்திருந்த மனிதர்கள் நிழல்கள் நகர்வது போல் நடந்து மெளனமாக ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்கள். அந்த அறைக்கு வெளியே வந்து கண் கலங்கித் தலைகுனிந்து சோக வடிவங்களாய் நின்றார்கள். அவர்களில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் மெல்ல அறைக்குள் நுழைந்து நாத்தழுதழுத்து உணர்வு நெகிழ்ந்து துடிக்கும் அவலக் குரலில்,

'இளைஞனே நீ இன்று சாகவில்லை; சாக மாட்டாய். வறுமையும், வாட்டமும், ஏழைமையும் ஏக்கமும் நிறைந்த இந்தத் தமிழ் மாநிலத்தில் தலைமுறைக்கு ஒரு தரம் நீ பிறப்பாய்; பிறக்க வேண்டும். பிறந்து நல்லனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று உருக்கமாக நிறுத்தி நிறுத்திக் கூறி விட்டுத் தம் கையிலிருந்த மாலையை அரவிந்தன் உடலில் சூட்டினார். எல்லோருடைய உள்ளத்தையும் உருகச் செய்தன அவர் செய்கையும் சொற்களும். பூரணி அழுகைக்கிடையே நிமிர்ந்து பார்த்தாள். இச்சொற்கள் அவள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. மாலையணிந்த தோற்றத்தில் உயிரோடும், உணர்வோடும் குறும்புநகை குலவ அரவிந்தன் படுத்திருப்பது போல் அவள் கண்களுக்குத் தோன்றியது. திருப்பரங்குன்றத்து மலையில் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு ஏறப்போவதாகக் கூறினபோது இப்படித்தானே சிரித்தான் அவன் சவமாகக் கிடக்கும் இந்த நிலையிலும் இந்த மாலை அவனுக்கு எத்தனை அழகாக இருக்கிறது? எழுந்து நிற்க முடியாதபடி, கீழே விழுந்து விட்ட அந்தத்துக்கத்துக்கு நடுவே அவளுக்கு விந்தையானதொரு பேராசை உண்டாயிற்று. மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிழல்கள் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/466&oldid=556189" இலிருந்து மீள்விக்கப்பட்டது