பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 குறிஞ்சிமலர் கொண்டிருப்பதுபோலவும் சொற்களின் துணைகொண்டு விளக்க முடியாததொரு தவிப்பை அடைகிறாள்.

அருகே கோவில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்டவனாகிய முருகனே அவளை அழைக்கிறானா கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறித் தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்குமுன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூரச் சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய்சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச்சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. துக்கத்தி லிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? 'அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது' என்று பித்துப் பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

'பிறவாமை வேண்டும்! மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும்!" - என்று மெல்லப் பாடிக்கொண்டே கண்களில் வடிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறாள். கண்களில் நீரையும், மனத்தில் துயரத்தையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிறபோது முருகனே அரவிந்தனாக மாறி நின்று மீண்டும் சிரிக்கிறான் கைகூப்பி வணங்கிவிட்டு முடிவற்ற மலைத் தொடர்களின் தனி வழியே இறங்கி நடக்கிறாள் அவள் வழியின் இருபுறமும் வெள்ளம் போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறுகொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.

다. 다 마

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/472&oldid=556195" இலிருந்து மீள்விக்கப்பட்டது