பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 67

அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஒர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.

'நான் உன்னைப் பற்றிக் கேட்பது தவறானால் மன்னித்து விடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்தும் உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத் தான் இதை விசாரிக்கிறேன்.'

பூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத் தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக்கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

'உன் தந்தையாரைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக் கிறேன் அம்மா, அவருடைய புத்தகங்கள்கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாகக் கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்து விட்டு இப்போதுதான் ஊரோடு வந்து விட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமானபின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடிய வில்லை. எல்லாவற்றையும் விற்றுக் கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக் கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. -

'உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா?" "என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி! பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை?"

அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்லுவது போல் தான் இப்படி சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/69&oldid=555793" இலிருந்து மீள்விக்கப்பட்டது