பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.

சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்! அப்படியே படைத்திருப்பதாகவும் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே?' என்பது தான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/7&oldid=808463" இலிருந்து மீள்விக்கப்பட்டது