பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 69

எனக்கு இதெல்லாம் அலுத்து விட்டது, அம்மா! ஏதோ செல்லமாக வளர்ந்து விட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது."

'உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்?" 'அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லாகுளம் போனால் ஐந்துமணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது, டிரைவர் இருக்கிறான். இந்தப் பெரிய வண்டியில் போய்வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறியதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில்தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக் கிறாள். சிறிய காருக்குச் சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது?"

'இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும் 'போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு?". இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்த போது கேட்காமல் இருந்திருக்க லாம் என்று பட்டது பூரணிக்கு.

'இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி! பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு, படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்ல தென்று நினைக்கிறவள் நான்.'

பூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும் பாலோர்க்கு, ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஒடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்ளேசுவரி அம்மாள் பார்த்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/71&oldid=555795" இலிருந்து மீள்விக்கப்பட்டது