பக்கம்:குறும்பா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கோவேந்தன்


சொல்லே ருழவர் மக்கள் நெஞ்சை உழலாம்,
தூய அன்பால் உண்மை வாழ்வு எழலாம்,
நல்லேருழவர் ஒரிருவர்
நாட்டிலுண்டு அவரைக் கண்டு தொழலாம்.
புல்லேருழவர் போக்கிலிகள்
புகுந்துவிடின் மக்கள் மனம் விழலாம்!



“புத்தகம் நூறு எழுதினாயே சாற்று
புதினந்தானே, புலவா” என்றேன் நேற்று;
சுற்று முற்றும் பார்த்தவர்கள்
சொன்னவிடை கேளீர், உண்மை நாற்று:
“புத்தகங்கள் எங்களுடைப்
பொய்மைகளின் வற்றிடாத ஊற்று”!



அயல்மனையை விழைந்தவனைப் பார்த்தேன்,
அரசியலில் ஆளவந்தான் வேர்த்தேன்.
மயக்கு திரைப் படத்தை வைத்தே
மக்களினை ஏமாற்றினான் ஆர்த்தேன்;
வியப்படைந்தேன், உண்மையிலே
வெற்றறிவைக் காட்ட, முகம் வேர்த்தேன்!



பொய்யை அரியணை ஏற்றியது நாடு
புனைசுருட்டே சட்டமன்றப் பீடு;
நைந்தலறி மக்கட்காக
அறிஞர்சிலர் விழிப்புணர்ச்சி யோடு
கைத்திறனைக் காட்டினார்கள்.
கண்டபயன் அவர்க்குச் சிறை வீடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/51&oldid=1195853" இலிருந்து மீள்விக்கப்பட்டது