பக்கம்:குறும்பா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

குறும்பா என்ற இந்த வடிவம் தமிழுக்குப் புதியது. ஆங்கிலத்தில் LIMERIK அல்லது NONSENSE VERSE என்ற பெயரில் இது வழங்கி வருகின்றது. வெறும் நகைச்சுவைக்கும், கிண்டலுக்கும் பயன்பட்ட இந்த வடிவத்தைத் 'குறும்பா’ என்ற பெயரில், இலங்கைப் பாவலர் மஹாகவி என்பவர் தமிழுக்குக் கொணர்ந்தார். இப்பொழுது அன்பர் கோவேந்தன் இதனைக் கருவியாக்கிக் கொண்டுள்ளார்.

நம்மைச் சுற்றிப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசியல், சமயம், இலக்கியம், திரைப்படம் போன்ற துறைகளில் மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு பலர் அடித்து வரும் கூத்துகளை அன்றாடம் கண்முன் கண்டு வருகின்றோம். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஒழுங்கின்மையே ஊழல்கட்குக் காரணமாயிருக்கின்றது. நாட்டை நல்வழிப் படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஒவ்வொருவரும் தன்னலச் சுரண்டல்களே மேற்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் நகைச்சுவையோடு சுட்டிக் காட்டுவதற்குக் குறும்பாவினைக் கோவேந்தன் கையாள்கின்றார்.

பாவலன் என்பவன் ஒழுங்குணர்வுடையவன்; தன் இலக்கியத்தின் வாயிலாய் ஒழுங்கை உணர்த்துதலும், ஒழுங்கின்மையைச் சுட்டிக் காட்டுதலும் பாவலனின பணிகள். இப் பணிகளைச் செய்வதற்கு நகைச்சுவையும் அங்கதமும் சிறந்த கருவிகளாகப் பயன்படுகின்றன. -

தீமைகளைக் கடுமையான மொழியில் கடிந்து சொல்லும்பொழுது அத் தீமைக்குக் காரணமாயிருப்பவர்கட்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும். அக் கடுமையோடு நகைச்சுவையும் கலந்திருக்குமானால், படிப்பவர் வருத்தத்தை மறந்து சிரிக்க நேரிடுகின்றது. பாவலன் மேல் சீற்றமும் ஏற்படுவதில்லை. சொல்லும் கருத்தும் நன்கு பதிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/9&oldid=1461725" இலிருந்து மீள்விக்கப்பட்டது