பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


எண்ணிக்கையில் பறித்த குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு : எந்த சமயத்திலும் குழந்தைகளின் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4.3 சிலைகள் (Statues)

விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகளில் ஒருவரை, தொடுபவராக (it) இருக்குமாறு, முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை முதல் விசிலுக்கு, குறிப்பிட்ட இடப்பரப்பிற்குள்ளே ஒடிக் கொண்டிருக்குமாறு கூறி, அடுத்த விசிலுக்கு, உடனே சிலை போல அசையாமல் நிற்குமாறு அறிவித்திட வேண்டும்.

விசில் சத்தம் கேட்டு, ஓடும் குழந்தைகளை தொடுபவர் பார்த்துக் கொண்டே நிற்க, அடுத்த விசில் ஒலி கேட்டவுடன், ஓடும் குழந்தைகள் திடீரென நின்று, சிலை போல அசையாமல் நிற்க வேண்டும்.

சிலையாக நின்ற பிறகும் அசைந்து கொண்டிருக்கிற சமநிலை இல்லாமல், தள்ளாடி நிற்கிற யாராவது ஒருவரை, தொடுபவர் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் ஆட்டமிழக்கிறார்.