பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

எனதன்புள்ள குழந்தைகளே!

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் இதுவரை எட்டுத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இது ஒன்பதாம் தொகுதி. இன்னும் ஒரு தொகுதியுடன் இக் கலைக்களஞ்சியம் முடிவு பெறும்.

இது விஞ்ஞான யுகம். இத்தொகுதியில் விஞ்ஞானம் பற்றி ஒரு பொதுக் கட்டுரை இடம்பெறுகின்றது. இந்நூற்றாண்டின் அரிய சாதனைகளுள் ஒன்று, மனிதன் சந்திரனுக்குச் சென்று வந்தமையாகும், இதுபற்றி விண்வெளிப் பயணம் என்ற கட்டுரை விரிவாகவும் சுவையாகவும் விளக்குகிறது. இதனுடன் தொடர்புடைய வாயுமண்டலம், வானவியல், விசுவக்கதிர்கள் பற்றியும் இதில் அறிந்துகொள்ளலாம்.

உணவளித்து உயிர் காக்கும் வேளாண்மை குறித்து விரிவான கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது. நாம் உண்ணும் உணவில் இன்றியமையாது சேர்ந்திருக்கவேண்டிய வைட்டமின்கள் பற்றியும் தனிக்கட்டுரை இதில் உண்டு.

வெள்ளை மான், வெள்ளைக் காக்கை, வெள்ளை மயில் போன்ற அதிசயப் பிறவிகளைப் பற்றிய வெண்பிறவி என்ற கட்டுரையும் சுவையானது.

இந்தியாவின் ஆன்மிகப் பெருமையை உலகெலாம் பரப்பிய சுவாமி விவேகாநந்தர், 'இரும்பு மனிதர்' எனப் புகழ்பெற்ற சர்தார் வல்லபபாய் பட்டேல், அடிமைத் தளையிலிருந்து அமெரிக்க நாட்டை விடுவித்த ஜார்ஜ் வாஷிங்க்டன், அமெரிக்காவில் நீக்ரோ மக்களின் அடிமைத் தளையறுத்து அழியாப் புகழ் கொண்ட ஆபிரகாம் லின்கன், சோவியத் குடியரசின் தந்தை லெனின் முதலியவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காணும் நீங்களும் அவர்களைப்போல் அறிவுச் சுடர்களாக விளங்கவேண்டும் என விரும்புகிறேன்.

இன்று காகிதம் கிடைப்பது அரிதாக உள்ளது; கிடைத்தாலும் விலை அதிகம். எனினும், முந்தையத் தொகுதிகளைப்போலவே, இத்தொகுதியும் நல்ல காகிதத்தில் மிகப் பல வண்ணப் படங்களுடனும் விளக்கப் படங்களுடனும் அழகாக அச்சிடப்பட்டு அதே விலைக்கு வழங்கப்படுகிறது. உங்கள் அறிவும் திறமையும் மேன்மேலும் ஓங்கி வளர்ந்து, ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இத்தொகுதியும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

பல்கலைக்கழகக் கட்டடம் தி. சு. அவினாசிலிங்கம் சென்னை 600005 தலைவர், 2-5-1975 தமிழ் வளர்ச்சிக் கழகம்