பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வீரமாமுனிவர் - வீழ்பனிப்பாறை


வீரமாமுனிவர் (1680 - 1747) : தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றிய ஐரோப்பிய அறிஞர்களுள் ஒருவர் வீர மாமுனிவர். இவர் இத்தாலி நாட்டில், மாந்துவா மாவட்டத்தில் காஸ்திரி யோனே என்னும் சிற்றூரில் 1680 நவம்பர் 8-ல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கொன்ஸ்டான்ஸ் ஜோசப் பெஷி (Constanzo Giuseppe Beschi) என்ப தாகும்.

இவர் இளமை முதலே பல மொழி களைக் கற்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். 18ஆம் வயதில் கத்தோலிக்கத் திருச்சபையின் இயேசு சபையில் சேர்ந் தார். இத்தாலியம், கிரேக்கம், எபி ரேயம் ( Hebrew), லத்தீன், போர்ச்சு கேசியம் முதலிய மொழிகளில் புலமை பெற்றார். பாதிரியார் பணிக்குரிய கல்வி பயின்று, 1709-ல் பாதிரியார் பட்டம் பெற்றார். 1710-ல் இந்தியாவிற்கு வந்து, தமிழ் நாட்டில் சமயத்தொண்டு புரியத் தொடங்கினார். தஞ்சாவூர், அரியலூர், மதுரை, காமநாயக்கன் பட்டி, கயத்தாறு முதலிய ஊர்களில் வீரமாமுனிவர் பணியாற்றினார்.

சமய நூலைத் தமிழருக்கு போதிக்க வேண்டுமென்று கருதித் தமிழ் பயின்றார்; தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தார்; தமிழில் தாமே நூல் கள் இயற்றும் ஆற்றல் பெற்றார். சமஸ் கிருதம், தெலுங்கு, உருது மொழிகளையும் நன்கு கற்றார். பல இந்திய மொழிகளைக் கற்றாலும், இவர் தமிழின் மீது மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தார். தம்முடைய பெயரை தைரிய நாத சுவாமி என வைத்துக்கொண்டார். பின்னர் அக்காலத் தமிழ்ச் சங்கத்தார் இவருடைய பெயரை வீரமாமுனிவர் என மாற்றினர். இப்பெயரே நிலைத்து விட்டது.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள கோனான்குப்பம் என்ற ஊரில் தேவதாயாரின் திருவுருவத்தைத் தமிழ் நாட்டுப் பெண்மணிபோல் அமைத்தார். அத் தாய்க்குப் பெரியநாயகி அம்மையார் எனப் பெயர் சூட்டினார். அம் மாவட் டத்திலுள்ள ஏலாக்குறிச்சி என்ற ஊரில் அமைந்திருந்த அடைக்கல மாதா கோயிலில் ஆண்டுதோறும் விழா நடக்க ஏற்பாடு செய்தார். 1742 வரை ஏலாக்குறிச்சியிலிருந்தே தொண்டாற்றி வந்தார். பிறகு தூத்துக்குடி சென்று அங்குச் சிறிதுகாலம் தங்கி இருந்தார். அங்கிருந்து கேரளத்திலுள்ள அம்பலக் காட்டில் நிறுவப்பெற்ற குருமடத்திற்குச் சென்றார். அங்கு 1747 பிப்ரவரி 4ஆம் நாள் காலமானார்.


வீரமாமுனிவர்
சென்னைக்
கடற்கரையிலுள்ள
சிலை

வீரமாமுனிவர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டு மிகப் பெரிது. இவர் தேவதாயாரின் மீது உள்ளத்தை உருக்கும் தேம்பாவணி என்னும் பெருங் காப்பியம் பாடினார். அடைக்கல மாதா வின் மீது திருக்காவலூர்க் கலம்பகம் இயற்றினார். வேதவிளக்கம், பேதக மறுத்தல், வேதியர் ஒழுக்கம் முதலிய பல உரைநடை நூல்களை எழுதி, தமிழில் உரைநடை நூல்கள் பெருக வழி காட்டினார். பரமார்த்த குரு கதை என்ற நகைச்சுவை நூலை இயற்றியவர் இவரே. கொடுந்தமிழ் இலக்கணம், செந் தமிழ் இலக்கணம், செந்தமிழ் விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய இலக்கண நூல்களை எழுதினார். மேலை நாடுகளில் வழங்கிய அகராதி (Dictionary) முறையில் அமைந்த தமிழ் அகராதி ஒன்றை முதன்முதலில் உருவாக்கியவர் வீரமா முனிவரே. இவருடைய சதுரகராதியே, பிற்காலத் தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடி எனலாம். தமிழ்-லத்தீன் அகராதி, போர்ச்சுகேசியம் - தமிழ்-லத்தீன் அகராதி என்னும் அகராதிகளையும் இவர் தயாரித்தார். திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால் இரண்டையும் இவர் லத்தீனில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இம் மொழிபெயர்ப்பு, ஐரோப்பியர்கள் திருக்குறளின் பெரு மையை அறிந்துகொள்ளத் துணை செய்தது.


வீழ்பனிப்பாறை ( Avalanche) : உயர்ந்த மலைகளில் வெண்பனி திரளும் பொழுது அது பனிக்கட்டியாக உறையும்.