பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கேள்வியும்

143 அப்பா! விளக்கில் திரியை அதிகமாக உயர்த்தி விட்டால் புகை வர ஆரம்பிக்கிறதே, அதற்குக்காரணம் என்ன?

தம்பி! எண்ணெய் திரியில் ஏறுகிறது; ஆவியாக மாறி எரிகிறது. அப்படி உண்டாகும் ஆவி முழுவதும் பிராண வாயுவோடு சேர்ந்து எரிந்தால் அப்பொழுது புகை கிடையாது. ஆனால் உண்டாகும் ஆவியில் ஒரு பாகம் எரியாமல் இருந்துவிட்டால் அதுதான் புகை. நாம் திரியை அதிகமாக உயர்த்திவிட்டால் அப்பொழுது அதிகமான எண்ணெய் ஆவியாக மாறுகிறது. அப்படி அதிகமாக உண்டாகும் ஆவி எரிவதற்கு அதிகமான காற்றுத் தேவை. ஆனால் விளக்கின் அடியில் காற்று வருவதற்காக வைத்திருக்கும் துவாரங்கள் ஒரே அளவாக இருப்பதால், அதிகமான காற்று வந்து சேர்வதில்லை. அதனால் எப்பொழுதும்போல் எரிந்து போக, எஞ்சியுள்ள ஆவி எரியாமல் புகையாகக் கிளம்பிவிடுகிறது. அந்தத் திரியை முன்போல் குறைத்துவிட்டால் விளக்கு முன்போல் புகையாமல் எரிய ஆரம்பித்துவிடும்.

144 அப்பா! விளக்கு எரியும்பொழுது, சிம்னியில் ஜலம் பட்டால் கீறி விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! விளக்கு எரிவதால் சிம்னி சூடாய் விடுகிறது. ஆயினும் அது எல்லா பாகங்களிலும் ஒரே விதமாக விரிவடைவதால் உடையாமல் இருக்கிறது. ஆனால் ஜலம் பட்டால் அது பட்ட இடத்தில் மட்டும் சிம்னி குளிர்ச்சி அடைந்து சுருங்கி விடுகிறது. மற்றப் பாகங்கள் சுருங்காமல் விரிந்தபடியே இருக்கின்றன. அதனால் அவற்றுக்கும் சுருங்கிய பாகத்துக்கும் இடையே இடம் விழுந்து விடுகிறது. அதைத்தான் கீறல் என்று கூறுகிறோம்.

145 அப்பா! அடுப்பில் ஊதினால் நன்றாக எரிகிறது, விளக்கில் ஊதினால் அணைந்து விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?