பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

107

161 அப்பா! ஜலம் கொதிக்கும் கெட்டிலுக்குக் கைபிடி மரத்திலோ பிரம்பாலோ செய்திருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கைப்பிடி இரும்பாயிருந்தால் ஜலம் கொதித்தவுடன் அதைப் பிடித்துத் தூக்க முடியாது. இரும்பில் சீக்கிரமாகச் சூடு ஏறிவிடும்; ஆனால் மரத்துக்கும் பிரம்புக்கும் உஷ்ணத்தை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்குக் கொண்டுபோகும் தன்மை கிடையாது. அதனால் அவற்றில் சூடு எளிதில் ஏறாது. அவற்றால் செய்த கைப்பிடியைப் பிடித்துத் தூக்கலாம்.

162 அப்பா! கரண்டியைக் காயவைத்து எண்ணெயில் வைத்தால் சுரு சுரு என்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கரண்டி காய்ந்தவுடன் அதிக உஷ்ணமாய் விடுகிறது. அதனால் அதை எண்ணெயில் வைத்தால் அந்த இடத்திலுள்ள எண்ணெய் ஆவியாக மாறி குமிழிகள் உண்டாகின்றன. குமிழி என்றால் என்ன? எண்ணெய் தானே மெல்லிய ஆடைபோல் ஆகி ஆவியை மூடிச் சிறு பந்துபோல் ஆய்விடுகின்றது. அதைத்தான் குமிழி என்கிறோம். அதன் உள்ளேயுள்ள ஆவி உஷ்ணத்தால் விரிய ஆரம்பிக்கிறது. அதனால் குமிழி உடைந்துவிடுகிறது, அப்படி உடைவதால் சிறு சப்தம் கேட்கிறது. ஒரு சப்தமாயிருந்தால் நமக்குக் கேட்காது. ஆனால் ஏராளமான குமிழிகள் உண்டாய் உடைந்து போவதால் அந்தச் சப்தங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து நமக்குச் சுரு சுரு என்று கேட்கிறது.

163 அப்பா! அரைப்பானை வெந்நீர் ஆறுவதைவிட முழுப் பானை வெந்நீர் ஆற அதிகநேரம் ஆகிறதே, அதற்குக் காரணம் என்ன?