பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

139

தம்பி! அச்சின் மீது இரண்டு பக்கங்களிலும் இரண்டு கட்டைகளை வைத்து, அவற்றின்மீது வில்மாதிரி வளைத்து இரும்புப் பட்டைகளை இறுக்கிவைத்து, அந்த விற்களின் மீது வண்டிக் கூண்டைப் பிணித்து வைத்த வண்டியை வில்வண்டி என்று கூறுவார்கள். அச்சின்மீது ஒரே கட்டையாக நெடுக வைத்து, அதன்மீது வண்டிக் கூண்டைப் பிணித்து வைத்தால், அந்த வண்டியைக் கட்டை வண்டி என்று கூறுவார்கள்.

சாதாரணமாக மனிதர் உட்கார்ந்து போவதற்குள்ள வண்டிகள் மாட்டுவண்டி, குதிரைவண்டி, மோட்டார் கார், ரயில் வண்டி எதுவானாலும் சரி, எல்லாம் வில்வண்டிகளாகவே இருக்கும். வண்டி விற்களின்மீது தங்குவதால் கீழும் மேலுமாக அசைந்துபோகும். அதனால் வண்டி, மேடு பள்ளங்களில் சென்றாலும் வண்டியில் இருப்பவர்களுக்குச் சௌகர்யமாயிருக்கும்.

ஆனால் வில் இல்லாத கட்டை வண்டியில் அப்படி வசதியிராது.மேடு பள்ளங்களில் போகும்போது வண்டியில் இருப்பவர்களுக்கு உடம்பு நோவும். சாதாரணமாகக் கட்டை வண்டிகளைச் சாமான்கள் ஏற்றிச் செல்வதற்குத் தான் உபயோகிப்பார்கள். மேடு பள்ளங்களில் சென்றால் சாமான்களுக்கு நோவாது அல்லவா?

209 அப்பா! சக்கரங்களுக்குப் பட்டை போட்டிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மாட்டுவண்டிக்கும் குதிரை வண்டிக்கும் சக்கரங்களை மரத்தினாலேயே செய்வார்கள். ஆனால் மரச் சக்கரங்கள் அதி சீக்கிரத்தில் தேய்ந்து போகும். அதனால் தான் அவற்றின்மீது இரும்புப் பட்டைகளை இறுக்கி வைக்கிறார்கள். இரும்புப் பட்டைகள் சீக்கிரத்தில் தேய்ந்து போகா.