பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கேள்வியும்

217 அப்பா! வண்டி ஓடும்போது சுகமாயிருக்கிறது. வண்டி நின்றுவிட்டால் வேர்க்கிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நம்முடைய உடம்பில் எப்பொழுதும் வேர்வை உண்டாய்க் கொண்டிருக்கிறது. அந்தவேர்வை ஆவியாக மாறிப் போய்க் கொண்டிருந்தால் நமக்குச் சுகமாய்த் தோன்றும். விசிறிகொண்டு விசிறும் பொழுது அப்படி உண்டாகும் ஆவியைத் துரத்துகிறோம். அதனால் வேர்வை ஆவியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆதலால் விசிறும் பொழுது நமக்குச் சுகமாய் இருக்கிறது.

அதே மாதிரி வண்டி ஓடும்பொழுது, அது காற்றை அசைத்து விடுவதால் காற்று வீசுகிறது, அதனால் நம்முடைய வேர்வை ஆவியாக மாறி நமக்குச் சுகத்தைத் தருகிறது. ஆனால் வண்டி நின்றதும் காற்று வீசுவதும் நின்று விடுகிறது. அதனால் வேர்வை ஆவியாக மாறுவதும் நின்று விடுகிறது. ஆதலால் உடம்பில் உஷ்ணம் அதிகமாகிக் கஷ்டமாகத் தோன்றுகிறது.

218 அப்பா! ரயில் போகும்பொழுது சில வேளைகளில் சாய்ந்தாலும் விழாமல் இருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

ஆம். ரயில்ரோடு வளைந்திருக்கும் இடங்களில் ரயில் வண்டி வளைவின் பக்கம் சாய்ந்துதான் போகும். ஆயினும் கீழே விழுந்து விடாது. அதற்குக் காரணம் கூறுகிறேன், கேள்.

தம்பி! எந்த வஸ்துவும் ஓட ஆரம்பித்துவிட்டால், வேறு ஏதேனும் அதைத் தடுத்து வேறு திசைக்குப் திருப்பினாலொழிய, அந்த வஸ்து தான் ஓடும் திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கும். இது இயற்கை விதிகளில் ஒன்று. இதை ந்யூட்டன் என்னும் பேரறிஞர் கண்டுபிடித்ததால் ந்யூட்டன் விதி என்றும் கூறுவார்கள்.