பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

17

நட்சத்திரத்தின் ஒளி மாறுதல் அடைகிறது. அதுதான் காரணம் என்று நார்வே தேசத்து வேகார்டு என்னும் பேராசிரியர் கூறுகிறார்கள் ஆனால் எது தான் சரியான காரணம் என்று இன்னும் முடிவாகக் கூறுவதற்கில்லை.

23 அப்பா! சில நட்சத்திரங்கள் மட்டும் இமை கொட்டாமல் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம் தம்பி! ஏழெட்டுத்தான் இமை கொட்டாமல் இருக்கும். அந்த ஏழெட்டும் நட்சத்திரங்கள் அல்ல அவைகளைக் கிரகங்கள் என்று கூறுவார்கள். தம்பி! பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கேட்டிருக்கிறாய் அல்லவா? அதேமாதிரி இன்னும் ஏழெட்டு கோளங்களும் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கோளங்கள் தான் கிரகங்கள். அவைகள் நட்சத்திரங்களைப் போல அதிக தூரத்தில் இல்லாமல் சமீபத்திலேயே இருக்கின்றன. அதனால் தான் அவை நட்சத்திரங்களைப்போல இமை கொட்டுவதில்லை.

24 அப்பா! நட்சத்திரங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று ஒரே தூரத்தில் காணப்படுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், ஒரே துரத்தில்தான் காணப்படுகின்றன.அதற்குக் காரணம் சொல்கிறேன் கேள், சூரியனைப் பூமியும் அதுபோன்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன. அந்தக் கிரகங்களில் சிலவற்றை அவற்றின் சந்திரன்கள் சுற்றி வருகின்றன. இவை எல்லாம் எப்போழுதும் ஒரே பாதையில் ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவ்விதம் ஒழுங்காக நடைபெறும்படி செய்வதையே நியூட்டன் என்னும் அறிஞர் ஆகர்ஷண சக்தி என்று கூறினார்.

கு-2