பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கேள்வியும்

 ஆனால் அது பரந்து விரிந்து இருப்பதால், காற்று அதை அடித்துக் கொண்டு போகக்கூடியதாயிருக்கிறது. பஞ்சை உருண்டையாக்கி மேலே வீசினால் அது பறக்காமல் கீழே வந்து விழுந்துவிடும். ஆனால் அந்த உருண்டையையே பிரித்து மெல்லிதாக அகலச் செய்து ஊதி விட்டால் கொஞ்ச நேரம் மேலே பறக்கும். அதுபோல் தான்.

மேகம் மேலே போகிறதே, அப்போதும் அதிலிருந்து சிறு துளிகள் விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனல் அவை வரும் வழியிலேயே ஆவியாக மாறிப் போவதால் பூமிக்கு வந்து சேர்வதில்லை. அப்படிச் சிறு துளிகள் விழும்போது, அந்த மேகத்தில் புதிதாக நீர்த்துளிகள் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும். அதனால் தான் மேகம் அளவில் குறையாமல் பறப்பதுபோல் தோன்றுகிறது.

55 அப்பா! சில மேகங்கள் கறுப்பாகவும் சில மேகங்கள் வெள்ளையாகவும் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! பூமியிலுள்ள ஜலம் நீராவியாக மாறி மேலே கிளம்பி குளிர்ந்து நீர்த்துளியாகின்றது. அந்த நீர்த் துளித் தொகுதிதான் மேகம் என்பது. அவ்விதம் உண்டாகும் மேகத்தில் அதிகமாக நீர்த்துளிகள் அடர்ந்திருக்குமானால் சூரியனுடைய ஒளி அவற்றுாடு வர முடியாமல் இருக்கும். அதனால் அந்த மேகம் நமக்குக் கறுப்பாகத் தெரியும். அத்தகைய கார் மேகங்களில் அதிகமாக ஜலம் இருப்பதால் அவைதான் மழையைக் கொட்டும். ஆனால் மேகத்தில் நீர்த் துளிகள் அடர்ந்திராவிட்டால் சூரியனுடைய ஒளி அவற்றுாடு எளிதில் வரும். அதனால் அந்த மேகங்கள் வெள்ளையாகத் தெரியும். அந்த மேகங்களிலிருந்து அதிகமான மழையை எதிர்பார்க்க முடியாது;