பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

49

பனிமேகம் என்று கூறுவார்கள். மழை மேகத்திலுள்ள நீர்த்துளிகளும் தூசிகளின்மீதுதான் படித்திருக்கின்றன. மலைமீது போனால் மழைமேகமும் இப்படி ஒருவர் முகம் ஒருவர்க்குத் தெரியாமல் மறைப்பதைப் பார்க்கலாம்.

ஆயினும் இரவில் மழை மேகமாயிருந்தால் பூமியின் உஷ்ணத்தை வெளியேறவொட்டாமல் மேகங்கள் தடுத்து விடுகின்றன. அதனால் அப்பொழுது பூமியும் குளிர்வதில்லை. அதன்மீது நிற்கும் நீராவியும் குளிர்வதில்லை. ஆதலால் பனியும் பணிமேகமும் உண்டாவதில்லை.

68 அப்பா! பூமியின்மீது காற்று வீசுகிறதே. அது நம்முடைய தலைக்கு மேலே எவ்வளவு தூரம்வரை இருக்கிறது?

தம்பி! எவ்வளவு தூரம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆகாய விமானங்கள் 10 1/2 மைல் தூரம் வரையும் பலூன்கள் 13 1/4 மைல்துரம் வரையும் சென்றிருக்கின்றன. வானத்தில் நட்சத்திரம் எரிந்து விழுவதை அறிவாய் அல்லவா? அது வால் நட்சத்திரத் துண்டுகள் ஆகும். அவை பூமியின் மீதுள்ள காற்றில் பட்டதும் காற்று அவற்றைத் தடுக்கும்பொழுது தீப்பற்றிக் கொள்கின்றன. அப்படி வால் நட்சத்திரங்களின் துண்டுகள் எரியும் உயரத்தைக் கணித சாஸ்திரமூலம் கணக்கிட்டதில் 200 மைல் வரை இருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு மேலும் காற்று இருக்கலாம். அந்தக் காற்று வால் நட்சத்திரத் துண்டுகளைத் தடுத்து தீப்பற்றச் செய்யமுடியாத அவ்வளவு மெல்லியதாக இருக்கலாம்.

69 அப்பா! காற்று இருக்கிறதே, அது ஏன் சூரிய வெளிச்சத்தையும் உஷ்ணத்தையும் தடுக்கவில்லை?

கு-4