பாட்டிலே கதை !
குழந்தைகளுக்குக் கதை படிப்பதிலே ஒரு மகிழ்ச்சி உண்டு. பாட்டுப் பாடுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சியைக் காணலாம். ஆனால், கதையும் பாட்டும் சேர்ந்த கதைப் பாடல்களாக இருந்துவிட்டால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. ஆங்கிலத்தில் கதைப் பாடல்கள் (Story Poems) ஏராளமாக இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் சரித்திரக் கதைகள், நீதிக் கதைகள், கற்பனைக் கதைகள், வேடிக்கைக் கதைகள் எனப் பலவகை உண்டு. பல புத்தகங்களாக அவை வெளிவந்துள்ளன. அவற்றைப் போல் நம் தமிழ் மொழியிலும் புத்தகங்கள் வேண்டுமென்று அடிக்கடி பள்ளி ஆசிரியர்களும், நூல் நிலையத்தினரும் கேட்கின்றனர்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் ‘அப்பம் திருடிய எலி’, ‘ஊகமுள்ள காகம்’ போன்ற சில கதைப் பாடல்களைக் குழந்தைகள் தாமே விரும்பிப் பாடும் வகையில் இயற்றித் தந்தார்கள். அவர்களுக்குப் பிறகு ஏராளமான கதைப் பாடல்களை எழுதி, இன்று குழந்தைப் பாடல்கள் எழுதும் பலருக்கு வழி காட்டியாக விளங்குபவர் குழந்தைக் கவிஞரேயாவார். இவர் இயற்றிய ‘மலரும் உள்ளம்’ இரு தொகுதிகளிலும் உள்ள கதைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றோம். இதிலுள்ள பாடல்கள் சிறுவருக்கு இன்பம் ஊட்டும் என நம்புகிறோம்.
- பதிப்பாளர்