பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
இலையும் பூவும் குளிர்காவும்
எங்கெங் குண்டு. சொல்வாயோ?4

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
குலைகுலை யாகச் செவ்வாழை
முக்கனி கொண்டு வந்தாயோ?5

செந்நெல் வயலில் நுழைந்தாயோ?
திருக்குளம் புகுந்து வந்தாயோ?
கன்னற் காட்டைக் கண்டாயோ?
காலாற் கடந்து சென்றாயோ? 6

கற்கள் உருட்டி வந்தாயோ?
கழனிக் குணவைத் தந்தாயோ?
மக்கள் வாழாப் பாலையிலும்
வந்தாய்! குளிர்மை தந்தாயோ? 7

ஏழை எளியோர் எண்ணாமல்
எவர்க்கும் குளிர்மை தந்தாயே!
தாழை போர்த்த கடலோரம்
வந்தாய்! கலந்தாய்! தணிந்தாயே! 8

தடுத்த அணையைச் சினந்தாயோ?
தமிழர் போலத் தணந்தாயோ?
கொடுத்தே உதவி வாழ்வதில்தான்
குளிர்மை உண்டெனக் கண்டாயோ? 9


குழந்தை இலக்கியம் ♦ 21