பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதரில் எங்கும் புட்கள் கூவும் கூச்சல்!-ஏரிப்
புல்வெளியோ எருமை கன்று மேய்ச்சல்!
மதகிடையில் வாளை வரால் கெண்டை-ஓடி
வந்து வந்து துள்ளிப் பாயும் அண்டை! 5

நாணற் காடு பூமணக்கும் ஓரம்!-வெண்
ணாரை வெய்யிற் காயும் அந்தி நேரம்
ஓணான் உச்சி மரமிருந்து விழும்!-ஏரி
ஓரப் பூக்கள் காற்றில் தலை தாழும்! 6

கரைகள் எங்கும் ஈச்சன் பனை காடு!-அந்திக்
கலகலப்பாம் ஓலை தொங்கும் கூடு!
நரைமலர்கள் கோடிநுனாப் பூக்கள்!-காய்த்த
நறுங்களாவின் பழமோ மொய்க்கும் ஈக்கள்! 7

ஏரியில்லா ஊருக் கழகு இல்லை!-ஏரி
நீர் வறண்டு போனால் வரும் தொல்லை!
ஏரி பெய்த நீரைக் காக்கும் எல்லை!-ஏரிக்
கரை யுடைந்து போனால் உயிர் இல்லை! 8

மீன்கொடுத்து வாழ வைக்கும் ஏரி!-நீள்
விழல் கொடுத்து வாழ வைக்கும் ஏரி!
வான்கொடுக்காப் போதும் செந்நெல் தந்தே-நம்மை
வாழ வைக்கும் வாழ வைக்கும் ஏரி ! 9

ஏரி பூத்த கொட்டி ஆம்பல் போலே-நித்தம்
இணைந்திருக்க வேண்டும் இமை போலே!
ஏரி காய்ந்து போனால் எட்டிப் பார்க்காக்-கெட்ட
நீர்ப்பறவை போலிருக்க வேண்டாம்! - 10


24 ♦ கவிஞர் வாணிதாசன்