பக்கம்:குழந்தை உலகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மான் பெருமை

15

 முதலே பெண்ணின் தாய் தன் மகளுக்குவேண்டிய “மயற்கைப்” பட்சணங்கள் செய்யத் திட்டம் போட்டுவிட்டாள். பெண்ணின் சகோதரனே சீமந்தத்துக்குரிய சீர் வரிசைகளைச் சேகரிக்கத் தொடங்கினான். சீமந்தம், வளைகாப்பு கடந்து பெண்ணைப் பிரசவத்தின் பொருட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கு ராஜோபசாரம் நடக்கிறது. கர்ப்பமுடைய அவளே ஒரு புனிதப் பொருளாகப் பாதுகாக்கிறார்கள். தாய் பிரசவகால மருத்துவத்துக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிக்கிறாள். அவள் பிள்ளை தன் சகோதரிக்குப் பிறக்கும் குழந்தைக்கு வேண்டிய தொட்டிலும் கட்டிலும், காப்பும் வளையும், சதங்கையும் அரைஞானும், சங்கும் கிலுகிலுப்பையும் வாங்குகிறான்.

குழந்தை பிறக்கிறது. “கடவுள் கிருபையால் பெரிய உயிரும் சின்ன உயிரும் பிரிந்துவிட்டன” என்ற ஆறுதல் உண்டாகிறது. தங்க விக்கிரகம் போன்ற ஆண் குழந்தையைக் கண்டு தாய் உள்ளம் பூரிக்கிறாள். பாட்டியோ ஆனந்த சாகரத்தில் நீந்தி விளையாடுகிறாள். அம்மான் தன் மருமானுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்து குவிக்கிறான்.

இப்படித் தன் பிறந்தகத்தில் தன் அருமைக் குழந்தைக்கு நடக்கும் சிறப்புக்களைக் காணும்போது தாய்க்கு எவ்வளவோ, பெருமிதம் உண்டாகிறது. அந்த உணர்ச்சியை அவள் எப்படி வெளியிடுவாள்? குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும்போது அவள் உள்ளத்திலே உள்ள ஆனந்தம் பாட்டாக வருகிறது.

புக்ககத்தைப் பற்றி அவள் பாராட்டுவதில்லை. ஏதாவது பாராட்டினாலும் குழந்தையின் அருமைத் தகப்பனாரைப் பற்றித்தான் சொல்கிறாள். ஆனால் அம்மானைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/24&oldid=1047198" இலிருந்து மீள்விக்கப்பட்டது