பக்கம்:குழந்தை உலகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. ஆடலும் பாடலும்

தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைக்கும் தாய் அது விழித்திருக்கும்போது அக்குழந்தையின் ஒவ்வொரு செயலிலும் இன்பம் கண்டு பாட்டுப் பாடுகிறாள். தலையை ஆட்டும்போது அதற்குப் பாட்டு, உடம்பை அசைக்கும்போது பாட்டு, கையை வீசப் பாட்டு, காலை ஆட்டப் பாட்டு, குதிப்பதற்கென்று பாட்டு இப்படியாகக் குழந்தையின் ஆட்ட பாட்டங்களுக்கெல்லாம் அவள் பாட்டுப் பாடுகிறாள். பாட்டுப் பாடிக் குழந்தையைக் காலை ஆட்டச் செய்தும் தலையை அசைக்கச் செய்தும் பழக்கி வைக்கிறாள். தேகப்பயிற்சியோடு பாட்டையும் பாடவேண்டுமென்று இந்தக் காலத்து ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்களே, அந்தத் தத்துவம் தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையை உட்கார வைத்துத் தலையையும் முதுகையும் பிடித்து முன்னும் பின்னும் தாய் ஆட்டுகிறாள். ஆட்டும்போது பாட்டுப் பாடுகிறாள். அந்தக் குழந்தையை ஆனையென்று சொல்லிப் பாராட்டுகிறாள். அன்பின் வலிமையிலும் பாட்டின் இசைவிலும் ஆட்டத்திலும் பயின்ற அந்தக் குழந்தை யானையாகி விடுமென்று அவள் நம்புகிறாள்.

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
காட்டுக் கரும்பை முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணியைக் கலக்கும் ஆனை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/29&oldid=1047393" இலிருந்து மீள்விக்கப்பட்டது