பக்கம்:குழந்தை உலகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடலும் பாடலும்

21



செல்லக் கரும்பைப் பறிக்கும் ஆனை
தெருவெல்லாம் சுற்றி ஓடும் ஆனை
குட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை
எட்டித் தேங்காயைப் பறிக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைத்ததாம்
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்!

அவள் ஆனையின் விளையாடல்களையெல்லாம் பாட்டில் வருணிக்கிறாள். குட்டியானையாக இருக்கும் போது அது கரும்பை முறிக்கிறது: எட்டித் தேங்காயைப் பறிக்கிறது. அதற்குக் கொம்பு வேறு முளைத்து விட்டால் சொல்லவேண்டுமா ?

***

தன் பெண்குழந்தையை மற்றொரு தாய் ஆடும்படி சொல்லுகிறாள்; பாட்டுப் பாடி ஆடச் செய்கிறாள்.

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயக் கிளியே சாய்ந்தாடு
சோலக் கிளியே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புருவே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
திண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்
தேனே மணியே சாய்ந்தாடு!

கைகளை வீசிப் பழகினால் கை மூட்டுகளுக்கும் தோளுக்கும் பலமென்று பள்ளிக்கூடத்தில் உடற் பயிற்சியைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தாய்தான் முன் அறி குருவாக விளங்குகிறாள். வார்த்தைகளையும் பொருள்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/30&oldid=1047396" இலிருந்து மீள்விக்கப்பட்டது