பக்கம்:குழந்தை உலகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலாப் பாட்டு

29



அம்ம அம்ம பூச்சி சின்னக் கிண்ணி தேச்சி
இன்னம் கொஞ்சம் சோச்சி பின்னும் கொஞ்சம் பாச்சி
எல்லாம் செரித்துப் போச்சா ? இன்னம் பெரு மூச்சா ?
நில்லு உண்ட தாச்சா நீயே பெரும் பாச்சா !

குழந்தையைத் தட்டிக் கொடுத்து, என்ன கொடுத்தாலும் தின்னும் பிள்ளை என்று ஒரு தாய் பாடுகிறாள்.

தத்தாங்கி தத்தாங்கி தட்டும் பிள்ளை
தயிரும் சோறும் தின்னும் பிள்ளை
அப்பம் சுட்டாலும் தின்னும் பிள்ளை
அவல் இடித்தாலும் தின்னும் பிள்ளை !

சற்று வயசான குழங்தைகள் நிலாச்சோறு சமைக்கும்போது பாட்டுப் பாடுவார்கள். சமையல் செய்யும் போது என்ன என்ன செய்வார்களோ அவற்றையெல்லாம் வரிசையாகச் சொல்லிப் பாடி அந்தக் கற்பனை விருந்தை நடத்துவார்கள்.

அரிசியைக் குத்து முன்னே அரித்துக் கழுவு பின்னே
உலையில் அரிசி போடு உடனே மேலே மூடு
கொதித்து வந்தபின் வடித்துக் கொட்டி ஆற்றி எடுத்துக்
கத்திரிக் காயை அரிந்து காரம் புளிப்புத் தெரிந்து
உப்பும் மசாலும் போட்டு ஒத்தி ருக்கக் கூட்டு
வெந்த பின்னே தாளித்து விரித்து இலையில் அமைத்து
யாவருங் கூடிப் புசிப்போம்! இன்ப மாக வசிப்போம் !

நிலாவைப் பார்த்துக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அது விடை சொல்வதாகவும் சில பாட்டுக்கள் உண்டு. பணம் சேர்ப்பதும், மாடு வாங்குவதும், வீடு மெழுகுவதும், பிள்ளை பெறுவதும், பிள்ளையின் விளையாட்டைக் கண்டு இன்புறுவதுமாகிய காட்சிகளைப் பாட்டிலே தொடர்புபடுத்திப் பாடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/38&oldid=1047455" இலிருந்து மீள்விக்கப்பட்டது