பக்கம்:குழந்தை உலகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. விளையாட்டுப் பாடல்கள்

குழங்தைகளுக்கு விளையாட்டென்றால் எத்தனை ஆசையென்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைகள் விளையாட்டிலே காட்டும் உற்சாகத்தைத் தெரிந்து அவர்களின் மன இயலைக் கண்டறிந்து, குழந்தைக் கல்வியை விளையாட்டாகவே போதிக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

சின்னஞ் சிறு குருவிபோலே திரிந்து வரும் குழந்தைகளை ஒன்று சேர்த்து விளையாடச் செய்து வேடிக்கை பார்க்கும் இயல்பு எல்லா நாட்டுக்கும் பொதுவானது. தமிழ்நாட்டுப் பாட்டிமார் அதில் தனியான சிரத்தை கொண்டு விளையாட்டை நடத்தி வைக்கும் தலைவியர்ளாக இருப்பார்கள். விளையாட்டுக்கு ஏற்ற பாடல்களைப் பாடுவார்கள். குழந்தைகளுக்கு ஆடலும் பாடலும் கற்றுக் கொடுப்பார்கள். ஆட்டமும் பாட்டும் ஒன்ரறோடொன்று கலந்து நிற்கும். விளையாட்டின் கட்டங்களை, பாட்டு அவ்வப்போது சுட்டி வரும்.

இவ்வாறு ஆடும் விளையாட்டுக்களை இக்காலத்துக் குழந்தைகள் மறந்துவிட்டார்கள். மழலை மொழி பேசும் குழந்தைகளுக்கு ஏற்ற விளயாட்டுக்களும் ஒடியாடும் குழந்தைகளுக்குத் தக்க விளையாட்டுக்களும் தனித்தனியே இருக்கின்றன. வீட்டில் அமர்ந்தபடியே பெண் குழந்தைகள் விளையாடும் ஆட்டங்கள் பல உண்டு. குதித்து மூச்சடக்கி நொண்டியாடிப் பலத்தை வளர்க்கும் படி ஆடும் ஆண் பிள்ளை விளையாட்டுக்கள் வேறு தனியே உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/47&oldid=1047675" இலிருந்து மீள்விக்கப்பட்டது