பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

9

அப்பா:— ஆமாம் அம்மா! அதுதான் விஷயம். பறவைகளின் வயிற்றில்போலவே மிருகங்களின் வயிற்றிலும் சிறு முட்டைகளுள்ள பைகள் இருக்கின்றன. அந்த முட்டைகள் பருத்து வளர்ந்துதான் குட்டிகள் உண்டாகின்றன. அதே மாதிரி தான் அம்மா, நீயும் தங்கச்சியும் அம்மா வயிற்றில் சிறு முட்டைகளாக இருந்து வளர்ந்து குழந்தைகள் ஆனிர்கள்.

பாப்பா:— அப்பா! அப்படியானல் நாங்கள் எந்த மாதிரியான முட்டைகளாக இருந்தோம். நீ பூவில் காட்டினேயே அந்த மாதிரியா ? அல்லது அவற்றை விடப்பெரியதாகவா?

அப்பா:— அந்தமாதிரியில்லை. அம்மா! நீங்கள் முட்டையாக இருந்தீர்களே, அந்த முட்டை கண்ணுக்குத் தெரியாது. ஒரு வெள்ளைக் கடுதாசியில் ஒரு கூர்மையான பென்சிலைக் கொண்டு ஒரு புள்ளி வைத்தால் எப்படியிருக்கும், அதே மாதிரித்தானிருக்கும்.

பாப்பா:— அவ்வளவு சிறியதா அப்பா! என்ன ஆச்சரியமாயிருக்கிறது. அந்தப் புள்ளி மாதிரியுள்ள சின்ன முட்டையிலிருந்தா நாங்கள் வந்தோம்.

அப்பா:— அம்மா! நீங்கள் மட்டுமா? உலகத்தில் உயிருள்ளவை எல்லாம் இந்த மாதிரியான சிறு முட்டைகளிருந்துதான் உண்டாகின்றன. ஆயிரம் பேர்க்கு நிழல் தரக்கூடிய ஆலமரமும் அப்படித்தான். வாலைக்கொண்டு அடித்துக்கொண்டு கப்பலை உடைத்துவிடக் கூடிய திமிங்கலமும் அப்படித்தான், மலைபோல் அசைந்து போகிற யானையும் அப்படித்தான். நாமும் அப்படித்தான்.

பாப்பா:— அப்பா! நீ சொல்லச் சொல்ல எல்லாம் ஆச்சரியமாயிருக்கிறதே.