பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

23

அத்துடன் எத்தனையோ பூக்கள் நன்றாக விளையாத பூக்களாகவும் அதனால் அதிலுள்ள மகரந்தமும் முட்டையும் இரண்டும் சேர்ந்து விதையாகக் கூடியபடி பக்குவமடையாதவையாயும் இருக்கும்; இரண்டும் பக்குவ மடைந்து சேர்ந்தாலும் செடிக்கு நோய் வந்து அவற்றை அழித்து விடலாம். அல்லது பூச்சிகள் முதலியன வந்து கெடுத்து விடவும் செய்யலாம். இப்படிப் பல காரணங்களால்தான் அநேக பூக்கள் காய் உண்டாகாமல் வீணுக உதிர்ந்து போகின்றன.

அதேபோல் மீன் இடும் முட்டைகளிலும் ஆண் மீன் இடும் தாதுநீர் படியாமலும்போகும். படிந்தாலும் சரியான அளவு படியாமலும் இருக்கலாம், சரியான அளவு படிந்தாலும் வேறு பூச்சிகள் வந்து அவற்றை அழிக்கவோ அல்லது வெள்ளம் வந்து அவற்றை அடித்துக் கொண்டு போகவோ செய்யலாம். ஆதலால் மீன் முட்டைகளும் எல்லாம் பருவமடைந்து மீன் குஞ்சுகள் ஆகாமற்போகும்.

பாப்பா:- அப்பா! இந்தக் கஷ்டங்கள் பறவைகளுக்குக் கிடையாதல்லவா? அவைகள் ஏராளமாக உண்டாகலாம் அல்லவா?

அப்பா:- அம்மா! நீ சொல்கிறபடி மீன்களுக்கும் செடிகளுக்கும் உள்ள கஷ்டங்கள் பறவைகளுக்குக் கிடையாதுதான் ஆனால் பறவைகளுக்கும் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை. ஆண் தாது அரை குறையாக விளைந்திருக்கலாம்: அல்லது பெண் பறவை முட்டையிடுவதற்கு வேண்டிய கூடு கிடையாமற் போகலாம்; அல்லது கூட்டில் பாம்பு முதலியன வந்து முட்டைகளைத் தின்று விடலாம்; அல்லது புயல் காற்று அடித்து கூட்டைப் பிய்த்து எறிந்து விடலாம்.

பாப்பா:- அப்படியானால் மிருகங்கட்கும் மனிதர்க்கும் இவ்விதமான இடையூறுகள் ஒன்றும் கிடையாது என்று எண்ணுகிறேன். என்ன அப்பா! அப்படித்தானே!