பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

29

பாப்பா:—அதனலே தங்கச்சி அம்மா வயிற்றில் இருந்தபொழுது அம்மா அதற்குப் பால் கொடுக்க வில்லை, தன்னுடைய ரத்தத்தையே கொடுத்தாள் என்று சொல்லுகிறியா, அப்பா!

அப்பா:— ஆம் அம்மா! அம்மாவினுடைய ரத்தம்தான் தங்கச்சி கருவாயிருந்தபோது அதை நாளுக்குநாள் பெரிதாக வளர்த்து வந்தது.

அம்மா:— தங்கச்சிக்காக இப்போது என்ன என்ன காரியங்கள் செய்கிறேன் உனக்குத் தெரியுமே. ஆனால் அம்மா அவளுக்காக இப்போதுதான் சிரமப்படுகிறேன் என்று எண்ணாதே. தங்கச்சி அம்மா வயிற்றுக்குள் இருந்த காலத்திலும் அவளுக்காக அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டாள். பார். தன்னுடைய ரத்தத்தைக்கூட அவளுக்குக் கொடுத்து அவளை வளர்த்து வந்தாள்.

பாப்பா: — அப்பா! இப்படித் தங்கச்சி அம்மா வயிற்றுக்குள் எத்தனை மாதம் இருந்தாள்?

அப்பா:— அப்படிப்பத்து மாதங்கள் இருந்தாள் அம்மா!

பாப்பா:— அப்பா! தங்கச்சி பத்து மாதங்கள் அம்மா வயிற்றுக்குள் இருந்ததாகச் சொல்லுகிறாயே, அப்படியே தான் ஆடுமாடு முதலிய எல்லா மிருகங்களும் அவற்றின் அம்மா வயிற்றில் பத்து மாதங்கள் இருக்கின்றனவோ?

அப்பா:— அப்படியில்லை அம்மா! சில மிருகங்கள் பத்து மாதங்களுக்குக் குறைவாகவும், சிலமிருகங்கள் பத்து மாதங்களுக்கு அதிகமாகவும் உள்ளே இருந்து வளர்கின்றன.

பாப்பா:— அப்பா! எந்த மிருகங்கள் குறைந்த காலமும் எந்த மிருகங்கள் அதிக காலமும் கர்ப்பப்பையில் இருக்கின்றன?

அப்பா:—அம்மா! சிறிய மிருகங்கள் அதிகக்காலம் இருப்பதில்லை. பெரிய மிருகங்கள் தான் அதிகக் காலமிருக்கின்றன.