பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

குழந்தை எப்படி பிறக்கிறது

பாப்பா:- அப்படியானால் அந்தக் குட்டிகளின் கொடியை யார் அறுக்கிறார்கள்? அவைகளுக்கு டாக்டர் ஏது அப்பா?

அப்பா:- அம்மா, அவைகளுக்கு டாக்டர் கிடையாது. அவைகளே தான் டாக்டர். குட்டி போட்டதும் தாய் இருக்கிறதே, அதுவே குட்டியின் கொப்பூழ்க் கொடியைக் கடித்துத் தின்றுவிடும்.

பாப்பா:- அது என்ன அப்பா ஆச்சரியமாயிருக்கிறதே.

அப்பா:- ஆம், அம்மா! அப்படித்தான். அதனால் அவைகளுக்குக் கெடுதல் ஒன்றுமில்லை.

பாப்பா:- அப்பா, அது சரி. ஆனால் ஒரு சமயத்தில் ஒரு தங்கச்சிதான் பிறக்க முடியுமோ? இரண்டு மூன்று தங்கச்சிகள் பிறக்கக்கூடாதோ?

அப்பா:- அம்மா, சாதாரணமாக ஒரு சமயத்தில் ஒரு குழந்தைதான் பிறக்கும். அபூர்வமாகத்தான் இரண்டு குழந்தைகள் பிறக்கும்.

பாப்பா:- அது ஏன் அப்பா அப்படி?

அப்பா:- அம்மா, ஆண் தாது உயிரைப்பற்றிச் சொன்னேனே, ஞாபகமிருக்கிறதா?

பாப்பா:- ஆம், அப்பா! அதுதானே அம்மாவின் கர்ப்பப்பை வழியாகச் சென்று அம்மாவின் முட்டைப் பையிலிருந்து வரும் முட்டையுடன் கலந்து குழந்தை உண்டாக்குகிறது என்று சொன்னாய்?

அப்பா:- ஆம், அம்மா! ஒரு ஆண் தாது உயிர்தான் பெண் முட்டைக்குள் போகும். அது போனவுடன் பெண் முட்டை மூடிக்கொள்ளும், மற்ற ஆண் உயிர்கள் எல்லாம் இறந்து போகும் என்று சொன்னேன் அல்லவா?

பாப்பா:- ஆம், அப்பா! அப்படி ஒரு ஆண் உயிர் உள்ளே போனல் ஒரு குழந்தைதான் உண்டாகுமோ?