பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:-ஆமாம் அப்பா! நாம் நடக்கப் போகும் பொழுது சாலையில் நிற்கிறதே அதுதானே அது எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அதுதான் எல்லா மரங்களிலும் பெரிய மரமோ அப்பா! அதன் பழம் கோலிக் காயளவு உருண்டையாய் சிவப்பாய் அழகாய் இருக்கிறது அப்பா.

அப்பா:-ஆமாம், அம்மா! அதனுள் என்ன இருக்கிறது. தெரியுமா?

பாப்பா:-அதனுள் விதை இருக்கிறது அப்பா அந்த விதை அம்மா தாளிக்கும்போது உபயோகிக்கிறார்களே கடுகு. அது மாதிரியே இருக்கிறது.

அப்பா:-அந்த விதை முளைக்கும் பொழுதும் அதன் முளை சிறிதாகத்தான் இருக்கும் பிறகுதான் அது வளர்ந்து அவ்வளவு பெரிய மரமாக ஆகின்றது. இப்படியேதான் எல்லா செடிகளும் மரங்களும் முதலில் சிறிய முளையாயிருந்து பெரிதாகின்றன.

பாப்பா:-அப்பா! இதுவும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆலம்விதை எவ்வளவு சிறியதாயிருக்கிறது, ஆலமரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது.

அப்பா:-அம்மா! அதுமட்டுமா அப்படி? கோழிக்குஞ்சு பார்த்திருக்கிறாயே, அது எவ்வளவு சிறியதாயிருக்கிறது. அதுதான் பெரிய சேவலாகவும் பெட்டைக் கோழியாகவும் ஆகிறது. அதே மாதிரிதான் மிருகங்களும், சிறியனவாகப் பிறந்து பெரியனவாக ஆகின்றன.

பாப்பா:-அப்பா! திருவிழாவில் பெரிய யானை வருகிறதே, அதுவும் அப்படித்தானே, அப்பா!

அப்பா:-ஆமாம், அம்மா! பெரிய யானையும் அப்படித்தான், சிறிய பூனையும் அப்படித்தான். எல்லாம் குட்டியாயிருந்துதான் பெரிய மிருகங்களாக ஆகின்றன.