பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

7


பாப்பா:——அப்படியானால் குட்டி எப்படி அதன் அம்மாவின் வயிற்றுக்குள் போக முடியும்? நானும் தங்கச்சியும் அம்மாவின் வயிற்றிலிருந்து வந்ததாகச் சொல்கிறாயே, நாங்கள் அம்மா வயிற்றுக்குள் எப்படிப் போனோம், அங்கே என்ன செய்தோம், அங்கிருந்து எப்படி வெளியே வந்தோம்? அப்பா!

அப்பா:——அம்மா! குழந்தை அம்மா வயிற்றுக்குள் போவதில்லை. அம்மா வயிற்றுக்குள்ளேயேதான் அது உண்டாகிறது.

பாப்பா:——அது எப்படி அப்பா? அம்மா வயிறும் நம்முடைய வயிறு மாதிரியே தானிருந்தது, பிறகுதான் பெரியதாயிற்று. இல்லையா அப்பா!

அப்பா:——ஆமாம் அம்மா! ஆனால் அதைக் கொண்டு தங்கச்சி வெளியேயிருந்து அம்மா வயிற்றுக்குள் போனாள் என்று எண்ணாதே.

பாப்பா:——அது என்ன அப்பா! நீ சொல்கிறது ஆச்சரியமாயிருக்கிறதே.

அப்பா:——ஆச்சரியம்தான், அது எப்படி என்று சொல்லுகிறேன், கேள், இந்தப் பூவரசம் பூவைப் பார்.

பாப்பா:——அப்பா! அது எவ்வளவு அழகாய் இருக்கிறது. அதன் மஞ்சள் நிறத்தைப் பார்த்துக் கொண்டே யிருக்கலாம் போல் இருக்கிறதல்லவா?

அப்பா:——ஆமாம் அம்மா! இப்பொழுது அதன் இதழ்களை நீக்கிவிடுகிறேன். உள்ளே நடுவில் என்ன இருக்கிறது பார்.

பூவரசம்பூ