பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

அடக்கிவிடலாமா? கூடவே கூடாது. குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு அவை பெரிய சாதனம். அதனால் கேள்வி கேட்பதை நாம் ஆதரிக்க வேண்டும்; கேள்விக்குச் சுலபமான பதிலும் பொறுமையோடு சொல்ல வேண்டும். தெரியாதவற்றைத் தெரிந்து சொல்ல வேண்டும். குழந்தைக்கு விளங்கும்படியான பாஷையில் பதில் அமைய வேண்டும். கேள்வி கேட்பதைத் தடுத்தால் குழந்தையின் அறிவு வளராது, உள்ளம் விரிவடையாது, ஆராய்ச்சி மனப்பான்மையும் தேய்ந்து போகும்.

கதை கேட்பதிலே, பாட்டுக் கேட்பதிலே சிறுவர்களுக்கு நிரம்ப ஆசை. அதைப் போலவே கேட்டவற்றைத் திருப்பிச் சொல்வதிலும் ஆசையுண்டு. வயதிற்கேற்ற கதைகளையும் பாட்டுக்களையும் சொன்னால் அவற்றை அவர்கள் உடனே பிடித்துக்கொள்வார்கள்.

கதைகளைத் திருப்பிச் சொல்வதாலும் பாட்டுக்களைப் பாடுவதாலும் குழந்தையின் வாக்கு வன்மை அதிகரிக்கின்றது. ‘நிலா நிலா வா! வா!-சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்பன போன்ற பாடல்களைக் குழந்தைகள் பாடி மகிழ்கின்றார்கள். குழந்தைப் பாடல்களும், சுலபமான கதை தழுவிய பாடல்களும், அபிநயப் பாடல்களும், சிறு சிறு கதைகளும் குழந்தைகளுக்கு நிறைய வேண்டும்.

இன்னும் ஒரு முக்கிய விஷயம். சிறுவர்களுக்குத் தங்கள் எண்ணங்களைத் தாராளமாக வெளியிட உரிமை இருக்க வேண்டும். குழந்தையின் மழலையைக் கேட்டுப் பெரியவர்கள் ஆனந்திக்கிறார்கள். ஆனல் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிச் சிறுவன் பேச வாயெடுத்தால் அது அதிகப் பிரசங்கித்தனம் என்று கருதப்படுகிறது. சிறுவனுக்கு அதில் பிரவேசிக்க அருகதை யில்லையென்பது பொதுவான தீர்மானம். பள்ளிகளிலும் இந்தத் தீர்மானந்தான் வெகுவாக அரசு செலுத்துகின்றது. பேச்செல்லாம்