பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

33

களை அங்கு அழைத்துச் சென்று மணலிலே விளையாடுவதற்கு அடிக்கடி சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குவதில் எல்லேயில்லாத இன்பமிருக்கிறது. பெற்றோரையும் மற்றவர்களையும் பல விஷயங்களுக்கு எதிர்பார்த்து நிற்கும் குழந்தை தானாகவே ஒன்றைச் செய்யும்போது தன்னம்பிக்கை பெற்று உற்சாகமடைகிறது. அதற்கு நாம் அன்போடு உதவ வேண்டும். குழந்தையின் கற்பனைத் திறனும் அதில் மலர்ச்சி யடைகின்றது.

அத்திறனை வளர்ப்பதற்கு வர்ணக் கலவைகளும் பெரிதும் உதவியாக இருக்கும் மலிவாகக் கிடைக்கும் சுவர்ப்பூச்சு வர்ணங்களே போதும். அவற்றைத் தண்ணீரில் கரைத்துக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு எவ்வளவோ ஆனந்தம். பல்லுக் குச்சிக்குப் பயன்படும் ஏதாவது நாருள்ள ஒரு குச்சியின் ஒரு முனையை நன்றாகத் தட்டிப் புருசு போலச் செய்து கொடுத்தால் குழந்தைக்கு அதுவே திருப்தி. சாதாரணக் காகிதமே போதும். ஒவியர்கள் உபயோகிக்கும் விலையதிகமான காகிதமொன்றும் தேவையில்லை. குழந்தைக்குத் தனது உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தையிலே சொல்ல இயலாது ; ஆனால் அவற்றைச் சித்திரங்களாக வரைந்து காட்ட முயலும்.

குழந்தைகளுக்கு ஆடுவதிலும், நடிப்பதிலும் மிகுந்த பற்றுதலுண்டு. எளிதாக அபிநயம் செய்து கொண்டு பாடுவதற்கு ஏற்ற பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம். குழந்தைகளின் வயதிற்குப் பொருத்தமான சிறு நாடகங்களையோ காட்சிகளையோ நடிக்கச் செய்யலாம். இவையெல்லாம் விளையாட்டுப் போலவே நடைபெற வேண்டும். தேர்ந்த நடிகர்களின் பாணிகளைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்பி இவ்விளையாட்டுக்களையே ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது.

கு - 3