பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

ஒவியம் வரைதலும், நாடகம் நடிப்பதும் பிற்காலத்திலே குழந்தைகளைப் பெரிய ஓவியர்களாகவோ நடிகர்களாகவோ செய்வதற்கென்று யாரும் நினைக்கககூடாது. அக்கலைகளிலே இயல்பான திறமையிருந்தால் ஒருவேளை அவர்கள் அவ்வாறு சிறப்படையலாம். அதற்குக் குழந்தைப் பருவத்தில் கிடைத்த சந்தர்ப்பம் பெரிதும் துணையாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு இக்கலைகளில் உற்சாக மூட்டுவது பொதுவாக அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் உதவி செய்வதற்காகத்தான். இன்பமும் விளையாட்டும் நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் தங்களுக்கு இயல்புத்திறன் எந்தத் துறையிலிருந்தாலும் அது மேலோங்குவதற்கு வேண்டிய உண்ர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பெறுகின்றன. அவ்வாறு பெற உதவி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

பொதுவாகக் குழந்தை ஒரே விளையாட்டில் நீண்டநேரம் ஈடுபட்டிருப்பதில்லை. அதேபோல ஒரே பொம்மையோ அல்லது விளையாட்டுக் கருவியோ அதற்கு எப்பொழுதும் இன்பமளிக்காது. புதுமையிலே குழந்தைக்கு ஆர்வம் அதிகம். புது அநுபவங்களை அது ஆவலோடு தேடுகின்றது. அதனால் புதிது புதிதாகப் பல விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பது எல்லோருக்கும் இயலாதென்று கருதலாம். இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டுப் பொருள்கள் என்றால் விலை அதிகமானவைகளாகவே இருக்கவேண்டுமென்பதில்லை. குழந்தைகள் விளையாடும் போது அவைகளே சேகரித்து. வைத்துக்கொள்ளும் பொருள்களைச் சற்றுக் கவனித்தால் இந்த உண்மை புலனாகும். ஒரு மூங்கில் கம்பை எடுத்து இரண்டுகால்களுக்கும் இடையே வைத்துக்கொண்டு குழந்தை குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துவிடும்.