பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

எந்தக் காரியமும் செய்ய முடியாது என்று நாளடைவிலே எண்ணிக் குழந்தை தாழ்மை உணர்ச்சி பெறவும் காரணமாகிவிடும். வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்குத் தடையாகவும் ஏற்பட்டுவிடும்.

பூனைக் குட்டிகள், நாய்க்குட்டிகள் முதலானவைகளைக் கவனித்தால் அவை சதா விளையாடிக் கொண்டிருப்பது தெரியவரும். அவையெல்லாம் தமது அவயவங்களைச் சரிவர உபயோகிப்பதில் பயிற்சி பெறுவதற்கும், வாழ்க்கையில் அத்தியாவசியமாகத் தமக்கு வேண்டிய திறமைகளைப் பெறுவதற்கும் அவ்வாறு செய்கின்றன. மனிதக் குழந்தையும் விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை அவை பூரணமாகப் பெற்று உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும், தன்னம்பிக்கை, உற்சாகம், துணிச்சல் முதலான பண்புகளும் பெறுவதற்கு நாம் உதவவேண்டும். அதன் வயதிற்குத் தக்கவாறு விளையாட்டுக்களும் மாறி அமையவேண்டும். பார்க்கத்தக்க இடங்களுக்கு நடந்து செல்லுதல், சிறு சிறு குன்றுகளிலும், மலைகளிலும் ஏறுதல், தண்ணிரிலே நீந்துதல் முதலியவை சற்று வயது வந்த குழந்தைகளுக்கு உகந்தவையாகும். குழந்தையிடத்திலே அன்பு மிகுந்த பெற்றோர்கள் அதைக் கவனித்து ஏற்பாடு செய்வதால் குழந்தையின் பிற்கால வாழ்க்கையின் வெற்றிக்குப் பெரிதும் உதவுகிறவர்களாவார்கள்.

குழந்தையின் உள்ளத்திலே எழும் பகைமை உணர்ச்சி முதலிய விரும்பத்தகாத உணர்ச்சிகளை விளையாட்டின் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். அவை உள்ளத்திலேயே அழுந்திக் கிடக்காமல் செய்யும் சக்தி விளையாட்டிற்கு உண்டு. சமூகத்திலே கூடி வாழவும், வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்விகளை அமைதியாக ஏற்றுக் காரியம் செய்யவும் கற்றுக்கொள்ள விளையாட்டு உதவுகிறது என்று மனத் தத்துவர்கள் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.