பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
71
அறிவிலே ஆசை

குழந்தைக்கு இந்த உலகமே புதியது. இதிலுள்ள பல பொருள்களும், காட்சிகளும் அதற்கு ஒரே புதுமை. அவற்றைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று குழந்தை ஆசைப்படுகிறது. சின்னக் குழந்தை ஒரு பொருளைக் கண்டவுடன் அதைத் தொட்டுப் பார்க்க, கையிலே பிடித்துப் பார்க்க விரும்புகிறது; அதன் பிறகு அதை வாயிலே கடித்துப் பார்க்க விரும்புகிறது. பேசக் கூடிய சக்தி கொஞ்சம் வந்தவுடன் ஏதாவதொன்றைப் பற்றிச் சதா கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் அந்த விடுப்பு என்ற இயல்பூக்கத்தினால் ஏற்படுவன.

இந்த இயல்பூக்கம் வயதாக ஆகச் சற்று மழுங்கிப் போய்விடுகிறது. ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆத்திரம் வயதேற ஏறக் குறைந்துபோய் விடுகிறது. குழந்தையிடத்திலே நன்றாக மேலோங்கி யிருக்கும் இந்த இயல்பூக்கத்தை நாம் போற்றவேண்டும். இதன்மூலம் குழந்தை அறிவு பெறுகின்றது. அதைத் தடைப்படுத்துவது குழந்தையின் அறிவு வளர்ச்சியைத் தடைப்படுத்துவதாகும்.

குழந்தை ஓடிவருகிறது: “அம்மா, ஏன் மழை பேயறது ? அது எங்கிருந்து வர்ரது?" என்று கேட்கிறது. "சூரியனை ராத்திரியிலே காணமே? அது எங்கே போகுது?” என்று இப்படி ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குப் பதில் சொன்னால் இன்னும் எத்தனையோ கேள்விகளைக் கேட்கிறது.

பல சமயங்களிலே நமக்குச் சலிப்புத் தட்டிப்போகும். பல சமயங்களிலே நம்மால் பதில் சொல்லவே முடியாது. அதனால் நாம் பொறுமையிழந்து குழந்தையின் இந்த இயல்பூக்கத்தை மழுங்கச் செய்துவிடக் கூடாது. குழந்-