பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

ஒரு திறமையைக் கட்டிக் கொடுப்பதில்லை. பணப்பையைப் பெற்றவன் அதற்காக முயன்றிருந்தாலும் சரி அல்லது முயற்சியே செய்யாமலிருந்தாலும் சரி அவனுக்கு அத்தொகை முழுவதும் கைக்கு வந்து விடுகிறது. பாரம்பரியம் அவ்வாறு திறமையைக் கட்டிக் கொடுப்பதில்லை. ஒரு திறமையை அல்லது கலேயை அல்லது வித்தையை ஒருவன் பெறுவதற்கு வேண்டிய மன இயல்பைத்தான் பாரம்பரியம் கொடுக்கும். சரியான சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மன இயல்பின் உதவியால் திறமைகள் மலர்ச்சியடையும். இல்லாவிட்டால் ஒரளவு வெளிப்பட்டும் வெளிப்படாமலுங்கூட அவை மறைந்துபோகும். ஆகையால் பாரம்பரியத்தால் கிடைத்தவையெல்லாம் சூழ்நிலையாலேதான் வளர வேண்டும் என்பதும், ஒருவனுடைய வாழ்க்கையை நிர்மாணிப்பதில் சூழ்நிலை பெரியதோர் முக்கிய ஸ்தானம் வகிக்கிறது என்பதும் தெளிவாகின்றன.

திறமைகள் மலர்வதில் சூழ்நிலை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிந்த சில மனத் தத்துவர்கள் பாரம்பரியம் என ஒன்று இல்லை என்றுகூடச் சொல்ல முன் வருகிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன். எந்தத் திறமையை வேண்டுமானலும் அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திப் பயிற்சியால் எய்திவிடலாம் என்பது அவர்களுடைய கொள்கை. இது ஓரளவிற்குச் சாத்தியமாகலாம். ஓவியத்திறமையே இல்லாத ஒருவன் பயிற்சியால் அக்கலையில் ஒரளவு முன்னேற்றமடையலாம். ஆனால் அதில் முழுவெற்றி பெறமுடியாது. இடைவிடாது பயின்று ஒரு சாதாரண சித்திரக்காரன் ஆகலாம். அவனுடைய ஓவியத்திலே அமரத்துவம் பெறக்கூடிய அம்சமோ பிறர் உள்ளத்தைப் பெரிதும் கவரக்கூடிய அம்சமோ இருக்காது. இதே போலத்தான் மற்றத் திறமைகளிலும்.

இவ்வாறு கூறுவதால் சூழ்நிலையின் முக்கியத்துவம் குறைந்து போய் விடுவதில்லை. பாரம்பரியம் விதை என்றால்