பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தனது குழுவின் முன் வந்துநின்றவுடன், இருவரும், நடுவில் நிற்பவர் கையில் படாமல் அடுத்த குழுப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள கோட்டைத் தொட்டு விட்டு, மீண்டும் தன் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

இடையிலே நிற்பவரால் தொடப்படாமல் தன் குழுவுக்கு வந்துவிட்டால், வந்த குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

இடையிலே தொடப்பட்டால், அவர் நடுவிலே நிற்பவராக மாற, நடுவிலே நிற்பவர் அவரின் எண்ணுக்குரியவராக மாறவேண்டும். அதேபோல் அவர் அழைக்க, ஆட்டம் தொடரும்.

எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்த பிறகு, இறுதியில் அதிக வெற்றி எண்கள் பெற்றிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

46. மந்திர வட்டம்

அமைப்பு:

ஆட்டக்காரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு பெரிய வட்டம் ஒன்றைக் குறிக்க வேண்டும். பிறகு, அந்த வட்டத்தின் கோட்டின் மேலேயே சுற்றிலும் சிறு சிறு வட்டங்களைப் போட்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுவதற்கு என்று வந்தவர்கள் எல்லோரும் வட்டத்தில் உள்ள கோட்டின் மேலேயே, சிறு சிறு வட்டங்களில் கால் படும்படி நடந்துகொண்டேயிருக்க வேண்டும்.