பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தெற்கு திசையைப் புரிந்துகொள்ளாமல், வேறு திசைப் பக்கம் திரும்பி நிற்பவர்கள் அனைவரும், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.

திசையைச் சொன்ன உடனேயே, திடீரெனத் திரும்பிக் குதிக்க வேண்டும். தாமதமாக யோசித்துத் திரும்புவதும், அடுத்தவர் திரும்புவதைப் பார்த்துவிட்டுத் தாம் திரும்புவதும் தவறான ஆட்டமாகும். அவர்களும் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள் தான்.

இவ்வாறு, குறிப்பிட்ட திசைப் பக்கம் சரியாகக் குதித்து இறுதிவரை யார் ஆட்டத்தில் நிற்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.


59. என்ன சத்தம்?


வகுப்பறையின் ஒரு மூலையில் (55-வது ஆட்டத்தைப் போலவே) திரைச்சீலை ஒன்றை முதலில் கட்டி வைத்திருக்க வேண்டும்.

அந்தத் திரைச் சீலையின் உட்புறம் சென்று, ஆசிரியர் பலவித சத்தங்களை உண்டு பண்ண வேண்டும்.

சத்தத்தைக் கேட்டு, சரியாகச் சொல் பவர் ஆட்டத்தில் இருக்கலாம், தவறாகச் சொல்பவர் ஆட்டமிழந்து, தனியே உட்கார வேண்டும்.

பலமுறை தொடர்ந்து வரும் சோதனைகளில், சரியான சத்தத்தை அறிந்து சொல்பவரே, ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார்.