பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகினர்க்கும் அறிவிக்க முயல்கிறது. கெடிலக்கரை நாகரிகம் பொதுவாகத் தமிழர் நாகரிகத்திற்கு மையமாய் உள்ளது எனலாம்.

வெளியுலகத்தைப் பற்றி அறிய விரும்பும் தமிழ் மக்கள், தங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்நூலும் துணைபுரியும்.

நாம் பிற நாடுகளைப் பற்றி நம் மொழியில் நூல் எழுதுவது போலவே, பிற நாட்டினரும் நம் நாட்டைப் பற்றித் தம் மொழிகளில் நூல் எழுதுகின்றனர். இத்தகைய நூல்களை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் காணலாம். நம் நாட்டைப்பற்றிப் பிரெஞ்சு மொழியில் எழுதப்பெற்றுள்ள மிகப் பெரிய ஒரு நூலின் மேலட்டையில், ‘இந்நூல் 28 படங்களுடன் கூடியது’ என்னும் அறிவிப்பை அண்மையில் கண்டு வியப்புற்றேன். அதனினும் சிறியதான இந்நூலில் ஐம்பத்தொரு (51) விளக்கப் படங்கள் சேர்த்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவற்றைக் கெடிலக்கரைப் பகுதிகட்கு நானே நண்பர்களுடன் நேரிற் சென்று பார்த்து எடுத்து வந்தேன். ஒன்பது படங்கள் மட்டும் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டு நிறுவனத்தால் அளிக்கப் பெற்றவை: அப்படங்களின் கீழே உதவி குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிக்காக அந் நிறுவனத்திற்கு நான் மிக்க நன்றி செலுத்துகிறேன்.

படம் எடுப்பதற்காகக் கெடிலக்கரைப் பகுதிகட்குச் சென்று வந்த நாள்கள் மகிழ்ச்சியான நாள்கள் - மறக்க முடியாத நாள்கள். சேந்தமங்கலம் கோயில்-கோட்டை போன்ற சில இடங்களை விட்டுப் பிரிந்து வர மனமே வரவில்லை. கெடிலக்கரையில் பார்த்தற்குரிய பகுதிகள் பல உள. நேரில் செல்லாதவர்கள் இந்நூல் வாயிலாகவாவது அறிந்து மகிழலாம்.

தமிழ் நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் ஓரளவு பெரியதாகவே வளர்ந்துவிட்டது. ஆனால், ஐரோப்பிய மொழி நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் சிறியதே. தரத்துடன்