பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் தொன்மை

99


திரும்பிவந்து கொண்டிருந்தபோது, திருவயிந்திரபுரத்திற்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் இடையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் ஊரில் வண்டியை நிறுத்தி, பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரையணுகிச் சில செய்திகளை வினவினேன் நான். அவரை விட்டுப் பிரிந்து வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு மீண்டும் இறங்கிப்போய் அவர் பெயரைக் கேட்டேன். முத்தால் நாயுடு என்றார் அவர். இப்படி முன்பின் அறியாத முத்தால் நாயடு அறிவித்ததுதான் கெடிலக்கரைக் கல்மரச் செய்தி. எனவே, அவர் அறிவித்த செய்தி நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் இருக்கும். அவர் கற்பனை கலந்து பொய்ச் செய்தி புகலக் காரணமேயில்லை. அவருக்கு நன்றி! அவர் வாழ்க!

செய்ய வேண்டியது

புவியியல் வல்லுநர்கள் (Geologists) முத்தால் நாயடு குறிப்பிட்ட பகுதியைத் தோண்டி ஆராய்ந்தால் கல் மரங்கள் பலவற்றைக் கண்டெடுக்கலாம். குப்பம் சென்று அவரை இடம் காண்பிக்கச் செய்து ஆவன புரியவேண்டும்.