பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கெடிலக்கரை நாகரிகம்


அழைக்கப்பட்டது. இந்தப் பகுதி அக் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த மன்னர்களால் ஆளப்பட்டதால் மலையமானாடு என்னும் பெயர் பெற்றது. பின்னர் மலையமானாடு என்னும் பெயர் சுருங்கி மலாடு என மருவிற்று. இதனை இலக்கண நூலார் ‘மரூஉப் பெயர்’ என்பர். நன்னூலில்,

[1]"இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉ என் றாகு மூவகை யியல்பும்...."

என்னும் நூற்பா உரையில், “....மலையமானாடு என்பதனை மலாடு என்றும், சோழ நாடு என்பதனைச் சோணாடு என்றும் ... வருவனவும் இவ்வாற்றான் வருவன பிறவும் மரூஉ மொழி” என மயிலைநாதர் எடுத்துக்காட்டி யிருப்பது காண்க, அதே நன்னூலில்,

[2]"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்...."

என்னும் நூற்பாவின் விளக்கவுரையில், செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலங்களின் (நாடுகளின்) பெயர்களைக் கூறுமுகத்தான்,

"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,
பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய
சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"

என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க. ‘மலாட்டார் (மலாடு நாட்டார்) தோழியை இகுளை என்று வழங்குவர்’ என உரையாசிரியர் மயிலைநாதர் குறிப்பிட்டுள்ளார். [3]'மலாடர் கோமான்’ எனச் சேக்கிழாரும் இப் பெயரை ஆண்டுள்ளார். மலாடு என்னும் பெயர் இலக்கிய இலக்கண நூல்களிலேயன்றி,

'சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடானஜகந்நாத
வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ -
‘மிலாடு (மலாடு) ஆகிய ஜனனாத வளநாட்டுக்
குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ -
  1. நன்னூல் - பெயரியல் - 10.
  2. நன்னூல் - பெயரியல் - 16.
  3. பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.