பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாடு

113


என்பன போலத் திருக்கோவலூர்க் கல்வெட்டுக்களிலும் ஆட்சி பெற்றுள்ளது. இதிலிருந்து, ஒரு தனி நாட்டிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தும் அந்தக் காலத்தில் மலாடு நாட்டிற்கு. இருந்ததாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மலையமான்களின் நல்ல ஆட்சியும் மாட்சியுமேயாகும். செஞ்சி வட்டத்தில் மலையமான் பெயரால் ‘மலையனூர்’ என ஓர் ஊர் இருப்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் மக்களுக்கு ‘மலையன்’ என்னும் பெயர் வைக்கும் வழக்கம் இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது, மலையமானுக்கு மலையன் என்னும் பெயர் உண்மையை, ‘செவ்வேல் மலையன் முள்ளூர் (குறுந்தொகை - 312), ‘முள்ளூர்....மலையனது’ (நற்றிணை - 170), ‘மலையன்....முள்ளூர் மீமிசை’ (புறநானூறு - 123) முதலிய சங்க இலக்கிய ஆட்சிகளால் அறிக.

இந்த நாட்டிற்கு மலாடு என்னும் பெயரையடுத்து, ‘நடுநாடு,’ ‘திருமுனைப்பாடி நாடு’ ‘சேதி நாடு,’ ‘மகத நாடு', ‘சகந்நாத நாடு', ‘சன நாத நாடு’ என்னும் பெயர் வழக்காறுகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழக சுவிட்சர்லாந்து

நடுநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன:

1. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் நடுவே இருப்பதால் நடுநாடு எனப்பட்டது. அஃதாவது, தென்பெண்ணையாற்றுக்கு வடக்கேயிருப்பது தொண்டை நாடு; வடவெள்ளாற்றிற்குத் தெற்கே யிருப்பது சோழநாடு; இந்த இரண்டிற்கும் நடுவேயிருப்பது நடுநாடு.

2. மலையமான், தான் புரிந்த உதவிகளுக்காகச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனக்கு அளித்த நிலப்பகுதிகளை இணைத்து, மூவர் நாடுகட்கும் எல்லை உடையதாக - மூவர் நாடுகட்கும் நடுவே அமைத்துக் கொண்ட நிலப்பகுதி யாதலின் நடுநாடு எனப்பட்டது.

3. முடியுடை மூவேந்தர்க்கும் பொதுவுடைமை உள்ளதாக நடுநிலைமையில் இருந்ததால் நடுநாடு எனப்பட்டது.

4. மலையமான் மரபினர் மூவேந்தரிடத்தும் நட்பு உடையவராக மூவேந்தரும் உதவி வேண்டிய போதெல்லாம் புரிந்தவராக - மூவேந்தர்க்கும் நடுநிலை உடையவராக இருந்தமையால் அவர்கள் ஆண்ட நாடு நடுநாடு எனப்பட்டது.

கெ .8.