பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கெடிலக்கரை நாகரிகம்


"உவப்புடன் ஒரு சீராமனும் வழிபட்
டுள்ளதும் இந்நடு நாடே."

மற்றும், புலவர் வரந்தருவார் வில்லிபாரதத்தின் பாயிரச் செய்யுளில், “திருமுனைப் பாடிநாடு நீர்வளம் மிக்கநாடு; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார் மூவரும் கோவலூரில் ஒன்று சேர்ந்து திருமாலைத் தொழுதநாடு; தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவராகிய நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறந்த நாடு"- என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருடைய பாடற் பகுதிகள் வருமாறு:

"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாdu”
"பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி
முகுந்தனைத் தொழுதநன் னாடு
தேவரும் மறையும் இன்னமுங் காணாச்
செஞ்சடைக் கடவுளைப் பாடி
யாவரும் மதித்தோர் மூவரில் இருவர்
பிறந்த நாடு இந்தநன் னாடு."

இவ்வாறு புலவர் பலரால் போற்றிப் புகழப் பெற்ற பெருஞ்சிறப்பிற்குரியது திருமுனைப்பாடிநாடு. இலக்கியங் களிலேயன்றிக் கல்வெட்டுக்களிலும் ‘திருமுனைப்பாடிநாடு’ என்னும் பெயர் ஆட்சியைக் காணலாம்.

[1]"திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டுத் திருவாமூர்
ஊரோம்"

என்றும்

"திருமுனைப்பாடி நாட்டுப் பாண்டையூர் மங்கலங்
கிழான்"

என்றும் கல்வெட்டுக்களில் இப்பெயர் ஆளப்பட்டுள்ளமை காண்க சேதிநாடு

இந்நாட்டிற்குச் சேதி நாடு’ என்னும் பெயரும் இருப்பதை,

[2]"சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின்மன்னி"
  1. திருவாமூர்க் கோயில் கல்வெட்டு (கி.பி. 1090).
  2. பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.